என் மலர்
நீங்கள் தேடியது "தாம்பரம் செங்கோட்டை ரெயில்"
- புதிய ரெயில் சேவையால் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ரெயில் அறந்தாங்கி பகுதி மக்களின் விடியலுக்கான முன்னேற்றமான இருக்கும்.
நெல்லை:
நெல்லை-செங்கோட்டை ரெயில் வழித்தடம் நூற்றாண்டு கண்ட பாரம்பரியம் கொண்டதாகும்.
கடந்த 1,904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக தொடங்கப்பட்ட இந்த வழித்தடம் 21.9.2012-ம் ஆண்டு முதல் அகல ரெயில் பாதையாக இயங்கி வருகிறது.
நெல்லை-செங்கோட்டை மீட்டர் கேஜ் வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து 2 தினசரி ரெயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன.
ஆனால் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த வழித்தடத்தில் இருந்து பகல் நேரத்தில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.
இதனை பூர்த்தி செய்யும் வகையில் தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ், அம்பை-பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தென்காசி மாவட்ட பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி வண்டி எண் 20683 தாம்பரம்-செங்கோட்டை ரெயில் இயக்கத்தை பிரதமர் மோடி சென்னையில் இருந்து இன்று தொடங்கி வைக்கிறார்.
தாம்பரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 7.25 மணிக்கு வந்து சேரும். செங்கோட்டைக்கு காலை 9.30 மணிக்கு செல்லும். தொடக்க விழாவையொட்டி மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சேவை கிடையாது. வருகிற 16-ந் தேதி முதல் வழக்கமான ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.
இந்த ரெயில் ஏப்ரல், மே மாதங்களில் வாரம் ஒரு முறை ரெயிலாகவும், பின்னர் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என வாரம் 3 முறை இயக்கப்படும்.
இந்த ரெயில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய வழித்தடங்கள் வழியாக தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்கிறது.
இந்த ரெயிலில் 2 இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 தூங்கும் வசதி பெட்டிகள், 3 முன்பதிவில்லாத பெட்டிகள், 2 ஜெனரேட்டர் கார் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
தாம்பரம்-திருவாரூர் இடையே மின்சார என்ஜினிலும், திருவாருர்-செங்கோட்டை இடையே டீசல் என்ஜினிலும் இயக்கப்படும்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சீசன் நேரங்களில் குற்றாலத்திற்கு செல்லும் பயணிகள் இந்த ரெயில் மூலம் மிகவும் பயன் அடைவார்கள்.
தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிலீப்பர் வகை டிக்கெட் ரூ. 405, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 985, 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 1,505-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிலீப்பர் கட்டணம் ரூ. 435, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 1060, 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 1620-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் சேவை தென்காசி மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் தென்காசி மாவட்டத்தில் முக்கிய நிறுத்தமான கடையத்தில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் கடையத்தில் நின்று செல்லும். நெல்லை, தென்காசி மார்க்கத்தில் முன்பதிவு அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ள கடையம் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் தாம்பரம்-செங்கோட்டை இடையே பயண நேரம் 13 மணி நேரம் 50 நிமிடம் ஆகும். இந்த பயண நேரத்தை குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும், மேலும் மானாமதுரை, அதிராம்பட்டிணம், சிதம்பரம், செங்கல்பட்டு நிறுத்தங்களிலும் இந்த ரெயில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணன் கூறும் போது, தாம்பரம்-செங்கோட்டை புதிய அதிவேக விரைவு ரெயிலால் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி மாவட்டங்கள் இடையே உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக இருக்கும்.
இந்த ரெயிலில் உள்ள ஏ.சி. பெட்டிகள் 2-ஐ குறைத்து 2-ம் வகுப்பு சிலீப்பர் பெட்டிகளாகவோ அல்லது சாதாரண இருக்கை பெட்டிகளாகவோ மாற்றினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த ரெயில் இயக்கத்தை அறிவித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
இது குறித்து டெல்டா மாவட்ட பயணிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு,
தஞ்சையை சேர்ந்த காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க செயலாளர்ஜீவக்குமார்:-
தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு வாராந்திர ரெயில் மூலம் டெல்டா மாவட்ட மக்கள் பயன் அடைவர்.
இங்கிருந்து தொழில் விஷயமாக வட தமிழகம், தென் தமிழகத்துக்கு தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். போதிய ரெயில் சேவை இல்லாத காரணத்தால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்சில் சென்று வந்தனர்.
தற்போது இன்று மாலை பிரதமர் மோடி தாம்பரம்-செங்கோட்டை புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் இனி பஸ்சை விட குறைந்த கட்டணத்தில் புதிய ரெயிலில் செல்லலாம். வாரம் 3 முறை இயக்கப்படும் ரெயிலை தினமும் இயக்க வேண்டும்.
கண்டிப்பாக பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அடுத்த மாதம் வரை இயக்கப்படும் என்பதை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
இருந்தாலும் தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவை டெல்டா மாவட்ட மக்களுக்கு மட்டுமில்லாது தென், வட தமிழக மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது என்றார்.
தாம்பரம்-செங்கோட்டை ரெயில் பல மாவட்டங்களை இணைக்கிறது. திருத்துறைப்பூண்டியில் இதுவரை இரண்டு ரெயில்கள் மட்டுமே இயங்கி வந்தன. தற்போது புதிய ரெயில் சேவையை இன்று மாலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதில் இரண்டு ரெயில்கள் திருத்துறைப்பூண்டி வழியாக செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. திருத்துறைப்பூண்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இங்கிருந்து சென்னையில் பலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து இதற்கு முன்னர் நேரடியாக எந்த ரெயிலும் இயக்கப்படாமல் இருந்ததால் சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால் திருவாரூர், மயிலாடுதுறைக்கு சென்று அங்கிருந்துதான் ரெயில் மூலம் செல்ல வேண்டும் . இதனால் கால விரயம் ஆனதோடு பலர் பஸ்ஸில் சென்று வந்தது.
தற்போது புதிய ரெயில் சேவையால் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தென் மாவட்டமான தென்காசி குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லவும் புதிய ரெயில் சேவை வழி வகுத்துள்ளது. வாராந்திரமாக இயக்கப்படும் இந்த ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்றார்.
திருச்சி கோட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க உறுப்பினர் ராஜகுமார் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது, இதற்காக அறந்தாங்கி, பட்டுக்கோட்டை , பேராவூரணி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரெயில் சேவையை தொடங்க வலியுறுத்தி ரெயில்வே வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தோம், மேலும் திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியும், இரவில்வே வாரியத் தலைவரை சந்தித்தும் பேசினர். அதன் விளைவாக இன்று முதல் செங்கோட்டை ரெயில் இயக்கப்படுகிறது. அதனை பிரதமர் மோடி அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ரெயில் அறந்தாங்கி பகுதி மக்களின் விடியலுக்கான முன்னேற்றமான இருக்கும். மாணவ, மாணவிகள், வியாபாரிகள், சாமானிய மக்களின் பயணமும் வாழ்வாதாரமும் மேம்படும். அறந்தாங்கி பகுதி மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.






