என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணாநகர் பூங்கா"
- வார விடுமுறை நாட்களில் அதிகமானோர் இதை பார்க்க வருகின்றனர்.
- அண்ணாநகர் பூங்கா கோபுரம் 12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது.
சென்னை :
சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில், 135 அடி உயரத்தில் சென்னையின் அழகை பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த கோபுரம் 2011-ம் ஆண்டு தற்கொலை சம்பவங்கள் நடப்பதாக கூறி, அதன் பயன்பாட்டை நிறுத்தினர். பொதுமக்கள் சென்று பார்வையிடவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டதோடு, வர்ணம் பூசியும், கோபுரத்தின் உச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், இயற்கையை கண் முன்னே கொண்டுவரும் வகையிலும் ஓவியங்கள் வரையப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட இந்த கோபுரத்தை பார்க்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலர் வந்து பார்த்து செல்கின்றனர். அதிலும் வார விடுமுறை நாட்களில் அதிகமானோர் இதை பார்க்க வருகின்றனர்.
அவ்வாறு பார்க்க வருபவர்களில் பெரும்பாலான இளம் தலைமுறையினர், தங்கள் காதல், நட்பை வளர்க்கும் விதமாக அவர்களுடைய பெயரையும், அவர்களுக்கு பிரியமானவர்களின் பெயரையும் எழுதி வைக்கும் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் மிகவும் நேர்த்தியாக புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட கோபுரம், தற்போது கோபுரத்தின் தூண்களில் பெயரை எழுதி வைத்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
அரசின் முயற்சியால் திறக்கப்பட்ட இந்த கோபுரத்தை இப்படி பெயரை பதிவு செய்து, அலங்கோலப்படுத்துவதில் அவர்களுக்கு என்ன லாபம்? என்றும், ஒரு திட்டத்தை, செயல் பாட்டை நடைமுறைக்கு கொண்டு வராத அரசை திட்டித் தீர்க்கும் இதுபோன்ற இளம் தலைமுறையினர், அவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வரும் இதுபோன்ற செயல்பாடுகளை அலங்கோலப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
எனவே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை கையும், களவுமாக பிடித்து, அவர்களை வைத்தே இதனை மீண்டும் சுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்பது கோபுரத்தை பார்வையிட வரும் பலரின் குரலாக ஒலிக்கிறது.






