என் மலர்
நீங்கள் தேடியது "செயல் விளக்க கண்காட்சி"
- ஓராண்டில் நடந்த நிகழ்ச்சிகளை கண்காட்சிக்காக காட்சிப் படுத்தியிருந்தனர்.
- யூகே நிறுவனத்தின் செயல்திட்டத்தில் ஈடுபட்ட 35 மாணவர்கள், 3 நிலைகளை முடித்து சில்வர் விருதை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓராண்டில் நடந்த நிகழ்ச்சிகளை கண்காட்சிக்காக காட்சிப் படுத்தியிருந்தனர்.
இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி என அனைத்து பாட ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் இந்த கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் விருதுகள் என அனைத்து சாதனங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த ஆண்டில் 550-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 50-க்கும் மேற்பட்ட கேடயங்களைப் பெற்று இம்மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சிறார் திரைப்படத்தில் புகைப்படம் எடுத்த7-ம் வகுப்பு மாணவி சாருஹாசினி, இதே திரைப்படம் குறித்து வானவில் மன்றம் சார்பில் கட்டுரை சமர்பித்த ஜெயின்கான் ஆகிய இருவரும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். விளையாட்டுப் பிரிவில், சாருஹாசினி டென்னிஸ், நீச்சல் போட்டி சுரேஷ், டேக்வாண்டோ லேபக்?ஷா ஆகியோர் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.
விண்கற்கள் கண்டுபிடிப்பில் 6 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு நாசாவின் மூலம் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். யூகே நிறுவனத்தின் செயல்திட்டத்தில் ஈடுபட்ட 35 மாணவர்கள், 3 நிலைகளை முடித்து சில்வர் விருதை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
எரிசக்தி மன்றம் சார்பில் நடந்த போட்டிகள், மனித வள மேம்பாட்டு ஆணையம் மூலம் நடந்த போட்டிகள், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள், மாவட்ட மைய நூலகத்தில் நடந்த பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஆகியவற்றில் மாணவ, மாணவியர் முதலிடம் பெற்றனர்.
மேலும் அரசுப் பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அருகில் உள்ள பள்ளிகளான கே.ஏ., நகர், தாசரபள்ளி, கே.பூசாரிப்பட்டி, ஒபலேசப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் வருகை புரிந்து பள்ளி செயல் விளக்க கண்காட்சியைப் பார்வையிட்டனர். முன்னதாக கண்காட்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாராணி தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சென்னம்மாள், உதவி தலைமை ஆசிரியர் விஜய் மற்றும் ஆசிரியர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றனர்.






