என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுங்கு விற்பனை “ஜோர்”"

    • “பனை” மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை மரத்தில் இருந்து பெறுகிறோம். அதில் ஒன்று தான் சுவையான உணவு பொருளான “நுங்கு”.
    • அக்னி வெயிலுக்கு இதமாக இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, கருப்புச்சாறு, ஜூஸ் உள்ளிட்ட குளிர் பானங்களை வாங்கி அருந்தும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

    தமிழர்களின் பாரம்பரியத்தில் "பனை" மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை மரத்தில் இருந்து பெறுகிறோம். அதில் ஒன்று தான் சுவையான உணவு பொருளான "நுங்கு".

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அவ்வப்போது, தலைகாட்டும் கோடை மழை வெயிலின் உக்கிரத்தை ஓரளவுக்கு தணிந்து, மக்களை குளிர்விக்கிறது. வாட்டி வதைக்கும் அக்னி வெயிலுக்கு இதமாக இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, கருப்புச்சாறு, ஜூஸ் உள்ளிட்ட குளிர் பானங்களை வாங்கி அருந்தும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழலால் ஜூஸ், கருப்புச்சாறு, குளிர்பானம் விற்கும் கடைகளில் மக்கள் அதிகமாக கூடுகின்றனர்.

    அடிக்கும் வெயிலுக்கு என்னதான் குளிர்பானங்களை வாங்கி குடித்தாலும், இயற்கைப் பானங்களான இளநீர், நுங்குகளை வாங்கி சாப்பிடுவதையே மக்கள், வாகன ஓட்டிகள், பெண்கள் விரும்புகின்றனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தற்காலிக நுங்கு கடைகள் அதிகரித்துள்ளன. இந்த இடங்களில் வாங்கி சாப்பிடுவதுடன் குடும்பத்தினருக்கும் நுங்கு கண்களை சிலர் வாங்கிச் செல்கின்றனர்.

    கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு நியாபகம் வருவது நுங்கு தான். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கோடையில் ஏற்படும் நாவறட்சி, நீர்சத்து குறைவு போன்றவைகளுக்கு நுங்கு சாப்பிடுவதால் பலன் கிடைக்கின்றன.

    கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நுங்கை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும்.

    ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும்.

    அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்காரபிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.

    பொதுவாக கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பதாலும், ஒரு சில கிருமிகள் இக்காலத்தில் பல்கி பெருகுவதாலும் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் ஒரு சிலருக்கு ஏற்படுகிறது. இக்காலத்தில் உடலுக்கு வலு சேர்க்க கூடிய உணவாகவும், அம்மை நோய்களை விரைவாக நீக்க கூடிய உணவாகவும் நுங்கு இருக்கிறது. எனவே அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் சரியான அளவில் நுங்கு சாப்பிடுவது நல்லது.

    ஆரம்ப காலங்களில் கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்த பலரும் நுங்கு சாப்பிடுவதற்காகவே இன்றும் கோடை விடுமுறையில் கிராமத்து பக்கம் விசிட் அடிப்பது வழக்கம். சொந்தம் பந்தங்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு நுங்கு உள்ளிட்ட இயற்கையின் கொடைகளை ருசித்து பார்ப்பதுமே விடுமுறை பயணத்தின் நோக்கமாக இருக்கும். கடைக்கோடி கிராமங்களில், அடர்ந்து குலைதள்ளி சிரித்திருக்கும் பனை மரத்தடியில் அமர்ந்து புதிய நுங்கை பறித்து விரல் துளாவி சுவைப்பது அலாதி விருப்பமாகும். மேலும் அதனை சுளை சுளையாக எடுத்து பால் பனை வெல்லம் சேர்தது சாப்பிடுவது தேவாமிர்தம் போலிருக்கும். நினைத்தாலே நாவின் எச்சில் ஊறும் நுங்கு இயற்கையின் அற்புதம்.

    ×