என் மலர்
நீங்கள் தேடியது "முறைகேடாக ஆட்கள்"
- லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தகவல்
- தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் பணி கிடைத்துள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விவசாய நிலத்துக்கான வரைபடம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக துணை நில அளவையர் விஜய கிருஷ்ணன் (47), உதவியாளர் கலைவாணன் (27) ஆகியோர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில் விஜய கிருஷ்ணனிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.33 ஆயிரத்து 500, கலைவாணனிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் லஞ்சமாக வரப்பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''விஜய கிருஷ்ணனின் தந்தை நில அளவையராக இருந்தவர். பணியில் இருக்கும்போதே இறந்ததால் அவரது பணி கருணை அடிப்படையில் விஜய கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.
விஜய கிருஷ்ணனின் தந்தை யாரிடமும் பணம் வாங்காதவர் என்று பெயர் எடுத்தவர். ஆனால் அவருக்கு நேர்மறையாக பணம் வாங்கிக் கொண்டுதான் வேலை செய்வாராம்.
குடியாத்தம் வட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பணியிட மாறுதல் பெற்று வந்தவரிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இருப்பதில்லை. எல்லா கோப்பைகளையும் உடனுக்குடன் பார்ப்பதற்காகவே 3 பேரை முறைகேடாக வேலைக்கு நியமித்துள்ளார்.
அவர்களுக்கு கணினியில் வரும் கோப்புகளை கையாள்வது, வரைபடம் வரைவது, பணம் வாங்குவது என எல்லா வேலைகளும் செய்து வந்துள்ளனர். இதற்காக அவர்களுக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் வரையிலான சம்பளத்தை லஞ்சப் பணத்தில் இருந்தே விஜய கிருஷ்ணன் கொடுத்துள்ளார். அதில்லாமல் தினசரி வரும் லஞ்சத்திலும் பங்கு கொடுத்துள்ளார்.
விஜய கிருஷ்ணன் செய்கின்ற வேலைகளை பெரும்பாலும் அந்த 3 பேரும்தான் செய்வார்கள். அதிக பணம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் விஜய கிருஷ்ணன் நேரில் சென்று நில அளவை செய்யும் வேலை செய்துள்ளார்.
ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் இல்லாமல் வீட்டுக்கு செல்ல மாட்டாராம். லஞ்ச பணத்தை உல்லாசமாக இருக்கவே செலவு செய்துள்ளார். அரசு விதிகளை மீறி முறைகேடாக பணி நியமனம் செய்தது குறித்து விசாரித்தபோது வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில அளவையர் அலுவலகங்களிலும் இதுபோன்று முறைகேடாக நியமிக்கப்பட்ட பலர் பணியாற்றி வருவதாக விஜய கிருஷ்ணன் கூறியுள்ளார்'' என்றனர்.






