என் மலர்
நீங்கள் தேடியது "பச்சைக்கிளிகள் பரிதவிப்பு"
- பச்சை குளத்தின் வளாகத்தில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பச்சை கிளிகள் வாழ்கின்றன.
- மேளதாளங்களின் இசை, பொதுமக்களின் சப்தம் உள்ளிட்ட கடும் இரைச்சலால் இரவில் மரங்களில் தஞ்சமடைய சென்ற பச்சைக்கிளிகள் பல மணி நேரம் பரிதவித்தன.
ஓசூர்,
ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக ஓசூர் தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பச்சை குளத்தின் வளாகத்தில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பச்சை கிளிகள் வாழ்கின்றன. தினம்தோறும் அதிகாலை நேரத்தில் மரங்களிலிருந்து வெளியேறும் இவை, உணவு தேடி விட்டு மாலை நேரத்தில் மீண்டும் அந்த மரங்களில் தஞ்சமடையும், இரவில் அந்த மரங்களில் நிம்மதியாக உறங்கும், ஆனால் நேற்று, விழாவுக்கு வந்த மக்கள் கூட்டத்தால் பச்சைக்கிளிகள் மரங்களில் தஞ்சமடையாமல் பரிதவித்து மரங்களை சுற்றி சுற்றி வட்டமடித்தன.
ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் திருவிழாவுக்காக தேர்ப்பேட்டை பகுதி முழுவதும் கடைகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடைவீதிகளிலும் கோயிலுக்கும் தெப்ப திருவிழாவுக்கும் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.
மேளதாளங்களின் இசை, பொதுமக்களின் சப்தம் உள்ளிட்ட கடும் இரைச்சலால் இரவில் மரங்களில் தஞ்சமடைய சென்ற பச்சைக்கிளிகள் பல மணி நேரம் பரிதவித்தன. தினந்தோறும் நிம்மதியாக இரவில் தூங்கும் கிளிகள் கூட்டம் மரங்களின் அருகே நீண்ட நேரம் கீச், கீச் என சப்தமிட்டவாறு சுற்றித்திரிந்தன.
நீண்ட நேரத்துக்கு பின்பு,தெப்ப உற்சவம் முடிந்து மக்கள் கூட்டம் அப்பகுதியில் குறைந்த பின்னரே பச்சை கிளிகள் மரங்களில் தஞ்சமடைந்து நிம்மதியாக குஞ்சுகளுடன் உறக்கத்திற்கு சென்றன.






