என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை ஐ.ஐ.டி. குழுவினர்"
- சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- விபத்துகள் ஏற்படும் முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்படம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் விபத்துகளில் 268 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துகளை குறைக்க விஐடி வல்லுநர் குழுவினருடன் இணைந்து போலீஸ் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை ஐ.ஐ.டி. குழுவினருடன் விபத்துகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற விபத்துகள் குறித்து ஆய்வு செய்ததில் அதிகப்படியான விபத்துகள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றதும் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நடைபெறுவதும் தெரியவந்துள்ளது.
39.19 சதவீதம் தேசிய நெடுஞ்சாலையிலும் 37.64 சதவீதம் மாநில நெஞ்சாலைகளில், 23.15 சதவீதம் இதர சாலைகளில் முறையே அதிக விபத்துகள் ஏற்படுகிறது.
அதிலும் நடந்து செல்பவர்கள் விபத்துகளில் அதிகம் இறக்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அதிக விபத்துகளை ஏற்படுத்துவதும் விபத்தில் சிக்கும் வாகனங்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லையில் நேஷ்னல் ரவுன்டானா, ஜி.எஸ் மஹால் அருகில், குடியாத்தம் நகரில் புதிய பஸ் நிலையம் அருகில், வேலூர் தெற்கில் டான் போஸ்கோ பள்ளி, ஊரீசு பள்ளி அருகில், பாகாயத்தில் தொரப்பாடி பெட்ரோல் பங்க் அருகில், காட்பாடியில் விஐடி ரோடு, கே.வி.குப்பத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளன.
இதையடுத்து, விபத்துகள் ஏற்படும் இடங்களில் வாகன தணிக்கையை அதிகரிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். விபத்து ஏற்படும் இடங்களில் அதிக வேகத்தில் வாகனங்கள் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறதா? இல்லை 3 பேர் பயணம், எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறதா? போன்ற காரணங்களுக்கு ஏற்ப சாலை போக்குவரத்து விதி மீறல் புகாரில் அபராதங்களை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ''வேலூர் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் 53 முக்கிய இடங்களில் பிளிங்கர்கள் (இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள்), எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட உள்ளன. அதேபோல், புதிதாக 300 பேரிகார்டுகள் (இரும்பு தடுப்புகள்) வாங்கப்பட்டு குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும்.
மேலும், சாலை பாதுகாப்பு குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட சாலை திருத்தங்களை தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ஊரக சாலைகளில் மேற்கொள்ள அந்தந்த நிர்வாகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.






