என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடகை இருமடங்காக உயர்வு"

    • குடும்ப வறுமை காரணமாக உறவினர்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு ஓசூர் மற்றும் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறோம்.
    • பணிபுரியும் மகளிர் விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ஓசூர்,

    தொழில் நகரான ஓசூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.

    இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    குறிப்பாகக் கல்வியறிவு குறைந்த வெளியூர் பெண்கள் தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்கள், சிறிய அளவிலான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இப்பெண்கள் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர். இதனால், இவர்கள் வருமானத்தில் பெரும்பகுதி தங்கும் வீட்டுக்கும், உணவுக்கும் செலவு செய்யும் நிலையுள்ளது.

    மேலும், பெங்களூரு நகரில் பணிபுரியும் பல பெண்கள், அங்கு வாடகை அதிகம் என்பதால், 4 பேருக்கு மேல் ஒன்றிணைந்து ஓசூரில் வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி பணிக்குச் சென்று வருகின்றனர்.

    இவ்வாறு வாடகை வீடுகளில் தங்கும் பெண்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கும் நிலையும், அதிக வாடகை செலுத்தும் நிலையும் உள்ளது.

    எனவே, ஓசூரில் பணிபுரியும் மகளிர் விடுதி கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு ஓசூரில் விடுதி கட்ட 93 சென்ட் நிலத்தைத் தேர்வு செய்து, விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் செயல்படுத்தவில்லை.

    தற்போது மாநகராட்சியாக ஓசூர் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் வீட்டின் வாடகையை அதன் உரிமையாளர்கள் இருமடங்கு உயர்த்தியுள்ளனர்.

    இதனால், பணிபுரியும் மகளிர் விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பணிபுரியும் பெண்கள் சிலர் கூறியதாவது:-

    குடும்ப வறுமை காரணமாக உறவினர்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு ஓசூர் மற்றும் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறோம். ஓசூரில் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும், சம்பளம் ரூ.12 ஆயிரத்தைத் தாண்டுவதில்லை. தற்போது, ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டதால், இங்கு வீடுகளுக்கான வாடகை உயர்ந்துள்ளது. குறைந்த சம்பளத்தில் வீட்டு வாடகைக்கு பெரும் தொகையைச் செலவு செய்து வருகிறோம்.

    எனவே, பணிபுரியும் பெண்களின் நலன் கருதி அரசு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய விடுதியைக் கட்டி குறைந்த வாடகைக்கு விட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

    ×