என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 killed 3 பேர் பலி"

    • செலவடையில் நேற்று முன்தினம் டாரஸ் லாரி ஒன்று வேகமாக அடுத்தடுத்து 3 மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • காட்டுராஜா (31) என்பவர் குடிபோதையில் லாரியை ஓட்டியதால் தான் இந்த விபத்து நேரிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த செலவடையில் நேற்று முன்தினம் டாரஸ் லாரி ஒன்று வேகமாக அடுத்தடுத்து 3 மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 25), இவருடைய சகோதரி மகன் சந்ேதாஷ் (15), ஜலகண்டாபுரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த செந்தில் மனைவி சாந்தி (35) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் பாலகிருஷ்ணனின் 1½ வயது குழந்தை யுவஸ்ரீ மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தது. மேலும் படுகாயம் அடைந்த வசந்தகுமார் (38), எடப்பாடி பக்கநாடு கிராமம் ஆணைப்பள்ளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி இந்துமதி (23) மற்றும் அவர்களது குழந்தை இனியா (2) ஆகிய 3 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் டாரஸ் லாரியை ஓட்டிய அரியலூரை சேர்ந்த காட்டுராஜா (31) என்பவர் குடிபோதையில் லாரியை ஓட்டியதால் தான் இந்த விபத்து நேரிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து ஜலகண்டாபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். அவர் மீது அதிவேகமாக அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், உயிரிழப்பு ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விசாரணை முடிவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×