என் மலர்
நீங்கள் தேடியது "அன்பழகன் நூற்றாண்டு விழா"
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
- வி.ஐ.டி.யில் அன்பழகன் நூற்றாண்டு விழா நடந்தது
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி.யில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.
தமிழியக்கம், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய விழாவுக்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பேராசிரியர் அன்பழகன் 9 முறை எம்.எல்.ஏ., ஒருமுறை எம்.எல்.சி., ஒருமுறை எம்.பி., 4 முறை அமைச்சராக இருந்தவர். கொள்கை பிடிப்பு கொண்டவர். கருணாநிதிக்கும் பேராசிரி யருக்கும் 76 ஆண்டுகள் நட்பு எங்கும் பார்க்க முடியாது. அடுத்த தலைமுறையினர் பெரியார் கொள்கைகளை தெரிந்துகொள்ள வேண்டும், அண்ணாவின் எழுத்து பேச்சுக்களை படிக்க வேண்டும், கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என்று கூறுவார்.
கி.பி.470-ல் திராவிட சங்கத்தை தோற்றுவித்த சமணர் வஜ்ரநந்தி. 1550 ஆண்டுகளுக்கு முன்பே சாதி, சமயம் இல்லாத திராவிடத்தை வளர்க்க முற்பட்டார்கள். 1908-ல் திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்டவர் பெரியார்'' இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-
''அண்ணாவுக்கு அருகில் நின்ற முதல் மாணவர் பேராசிரியர். சென்னை சென்றால் பேராசிரியர் வீட்டில்தான் தங்குவார். அண்ணாவின் முன்பாக கால் மேல் கால் போட்டு அமரக்கூடிய ஒரே ஆள் பேராசிரியர்தான். எம்.ஜி.ஆர் குறித்து வீராசாமி பேசும்போது அதற்கு பதில் கொடுக்க எம்.ஜி.ஆர் எழுந்திருக்கும்போது 'ராமச்சந்திரா உட்காரு' என பெயரிட்டு கூறுவார் பேராசிரியர். தலைவருக்கு அருகில் பொதுச்செயலாளர் இருக்கை இருக்கும். தலைவர் அருகில் சென்றால் அவரது இருக்கையில் உட்காரச் சொல்வார். நீயும் என்னைக்காவது உட்காருவ என்பார். அவர் கூறியபடி அண்ணா, நாவலர், பேராசிரியருக்கு அடுத்தபடியாக நான் பொதுச்செயலாராகி இருக்கிறேன்'' என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் விழா பேருரையாற்றினார். ''ஏங்கல்ஸ்-மார்க்ஸ் போல் கலைஞரும் பேராசிரியரும் இருந்தனர். 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது அண்ணா எங்கே என்று போலீஸ் தேடியது. அவர், பேராசிரியரின் சம்பந்தி ராஜநாயகத்தின் வீட்டில் இருந்தபடி அமைச்சரவை அமைத்துக் கொண்டிருந்தார் என பின்னாளில் தெரியவந்தது.
1942-ல் அண்ணா திருவாருருக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதும் தஞ்சாவூரில் ெரயிலில் ஏறி அண்ணாவிடம் பேராசிரியர் பேசினார். திருவாரூர் கூட்டத்தில் அண்ணா பேசுவதற்கு முன்பாக பேராசிரியரை அறிமுகம் செய்து வைத்து பேச வைத்தார். அங்குதான் கலைஞர்-பேராசிரியர் சந்திப்பு ஏற்படுகிறது.
1943-ல் திருவாரூர் தமிழ் மன்றத்தில் பேச அண்ணாவை கலைஞர் அழைத்தார். அங்கு பேராசிரியர் மட்டும் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் பேராசிரியரை வழியனுப்ப செலவுக்கு பணம் இல்லை. வீட்டில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தை அடகு வைத்து பேராசிரியரிடம் வழிச்செலவுக்கு பணம் கொடுத்தார் கலைஞர்.
நெருக்கடி நிலை ஏற்பட்டபோது திமுகவுக்கு ஆபத்து வந்தபோது கோவையில் திமுக மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் கலைஞர் கடைசியாக பேச வேண்டும். அதற்கு முன்பாக நாவலர், பேராசிரியர் பேச வேண்டும். பேராசிரியர் பேசும்போது 'கலைஞரை தலைமை தாங்க அழைக்கிறேன்' என்று சொல்லிவிட்டு அண்ணாவின் தூங்காத இதயமே வா என்றும் பெரியாரின் சாயலை, துணிச்சல், உறுதியை கலைஞரிடம் பார்க்கிறேன். அண்ணாவின் சாயலை, பேச்சின் ஈர்ப்பின் எழுத்தின் தாக்கமும் கலைஞரிடம் பார்க்கிறேன் என்று அழுத்தித் சொன்னார்'' என்றார்.
இதில், தமிழியக்க பொதுச்செயலாளர் கவியருவி அப்துல்காதர், பேராசிரியர் அன்பழகனின் மகள் செந்தாமரை, மருமகன் சொக்கலிங்கம், மகன் அன்பு செல்வன், பேரனும் வில்லிவாக்கம் எம்லம்ஏவுமான வெற்றியழகன், திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






