என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூச்சுக்குழாய்"

    • பெரும்பாலான மூச்சுக்குழாய் தொற்று நோய் பள்ளி பருவக்குழந்தைகளில் இருந்து வீட்டுக்கு பரவுகிறது.
    • இருமல், தும்மல் வரும்போது முகத்தை மூட வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் மூச்சு கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் மூச்சுக்குழாய் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    லேசான மூச்சுக்குழாய் அறிகுறிகள், தும்மல், நீர்க் கோழை, வறண்ட இருமல், காய்ச்சல், தலைவலி ஆகியவற்றுடன் மீண்டு வருகிறார்கள். ஆனால் இணை நோய்கள் உள்ள முதியவர்கள் அதி தீவிர அறிகுறிகளுடன் நிமோனியா, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மூச்சுக்குழாய் பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தேசிய முகமை ஆய்வு நிறுவனத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு மூச்சுக்குழாய் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்கோளாறு கொண்ட நோயாளிகள் அதிகரித்து வருவதாக அதன் இயக்குனர் டாக்டர் தீபா தெரிவித்தார்.

    ஆகஸ்ட் மாதத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூச்சுக் குழாய் நோய், நோயாளிகள் 62 பேர் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலை தொடர்கிறது.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    பெரும்பாலான மூச்சுக்குழாய் தொற்று நோய் பள்ளி பருவக்குழந்தைகளில் இருந்து வீட்டுக்கு பரவுகிறது. 70, 80 வயதுடையவர்களை இந்த நோய் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இணை நோய் போன்ற காரணிகளால் வயதானவர்களுக்கு அதிக இடர்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்த நோய் மிகவும் தொற்றக்கூடிய வைரஸ். இது லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொடுத்தாலும் நிமோனியா, பிராங்கைடிஸ் போன்ற தீவிரமான நோய்களை உருவாக்கக்கூடியது. தும்மல், இருமல் மூலம் எளிதாக மற்றவர்களுக்கு பரவக்கூடியது. மூச்சுக்குழாய் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முதல் 8 நாட்கள் வரை வைரசை பரப்பலாம். சிலருக்கு 2 வாரங்கள் வரை கூட நீடிக்கலாம். காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், உதடு-சருமம் நீலநிறம், உணவு சாப்பிடும் ஆர்வம் குறைதல், கோபமடைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் பாதிப்பில் இருந்து தவிர்க்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

    இருமல், தும்மல் வரும்போது முகத்தை மூட வேண்டும். நோயாளிகளுடன் நெருக்கத்தை தவிர்க்க வேண்டும். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.

    சென்னையில் காய்ச்சல் காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலானவர்கள் முதலில் இன்ப்புளூயன்சா என நினைக்கிறார்கள். ஆனால் தற்போது மூச்சுக்குழாய் நோய் பாதிப்பு அதிகம் கண்டறியப்படுகிறது.

    இவ்வாறு டாக்டர்கள் கூறினார். 

    • குழந்தையின் மூச்சு குழாயில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருள் சிக்கி இருப்பது தெரியவந்தது.
    • குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியான பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு சிறுமி அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    ஆஸ்பத்திரியில் குழந்தையை காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, குழந்தையின் மூச்சு குழாயில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருள் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் குழந்தைக்கு எந்தவித அறுவை சிகிச்சையும் இன்றி பிளாஸ்டிக் பொருளை அகற்ற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை இன்றி குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் பொருளை அகற்றினர். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    தற்போது குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சிகிச்சை காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடந்தது.

    வெற்றிகரமாக சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் குழந்தைகள், பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான பொருட்களை விழுங்கிய பின் அதனை எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தைக்கு நுரையீரல் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    எனவே குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல், இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×