என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கேற்க பதிவு"

    • மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • வெற்றி பெறும்அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், 2022-2023 என்ற பெயரில், மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்து பந்து கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, கபடி, சிலம்பம், தடகளம், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. 17 முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, கபடி, சிலம்பம், தடகளம், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடக்கிறது. மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்களுக்கு, ஓட்டம், இறகுப்பந்து, எறிபந்து, கபடி ஆகிய போட்டிகள் நடக்கிறது.

    அரசு ஊழியர்கள் ஆண்கள், பெண்களுக்கு கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் ஆகிய போட்டிகள் நடக்கிறது. அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயரை ஆடுகளம் என்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதன்பின்னர் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திட வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்ய வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். வெற்றி பெரும் அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×