என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளை ஈ"

    • இளநீர் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் வீரிய ஒட்டு ரக மரங்களின் ஓலைகளில் பச்சையமே இல்லாத அளவுக்கு வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது.
    • பிற ரக மரங்களில், மஞ்சள் நிற ஒட்டுப்பொறி கட்டி வைத்துள்ளோம். இருப்பினும் வெள்ளை ஈ தாக்குதல் குறையவில்லை.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல் தென்னை மரங்களில் நிரந்தரமாகியுள்ளது. வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு, அனைத்துப்பகுதிகளிலும் இந்நோய்த்தாக்குதல் வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக இளநீர் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் வீரிய ஒட்டு ரக மரங்களின் ஓலைகளில் பச்சையமே இல்லாத அளவுக்கு வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது.

    ஓலைகளின் உட்பகுதியில் இவ்வகை ஈக்கள், பச்சையத்தை சுரண்டுவதால் வெளிப்பகுதியில் தாக்குதல் தெரிவதில்லை. பச்சையம் இழந்து ஓலைகள் கருப்பாக மாறிய பிறகே பிரச்னை தெரியவருகிறது. இதனால் கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்ள விவசாயிகள் திணறுகின்றனர்.

    இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:-

    வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்தால் இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தி குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக குறைந்த காய்ப்புத்திறன் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.எனவே வீரிய ஒட்டு ரக மரங்களில் தண்ணீர் மற்றும் மருந்து தெளித்து வருகிறோம். பிற ரக மரங்களில், மஞ்சள் நிற ஒட்டுப்பொறி கட்டி வைத்துள்ளோம். இருப்பினும் வெள்ளை ஈ தாக்குதல் குறையவில்லை.

    வேளாண்துறை சார்பில் உயிரியல் முறையில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இரை விழுங்கிகள் மற்றும் ஒட்டுண்ணிகளை மானியத்தில் வழங்க வேண்டும்.மேலும் கிராமம்தோறும் ஒருங்கிணைந்த முறையில் நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றனர். 

    ×