என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் உறுதி"

    • முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க.அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
    • தி.மு.க. உறுப்பினர்களும் தங்கள் வார்டு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா மாமன்ற கூட்டரங்கில், நடைபெற்ற இக்கூட்டதிற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மேயர் சத்யா, ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநகரப்பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கிய முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க.அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

    தொடர்ந்து மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன் (அ.தி.மு.க) மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நிலவும் அவலங்கள் குறித்து பேச முற்பட்டார்.

    இதற்கு, தி.மு.க. உறுப்பினர்கள் நாகராஜ், அரசனட்டி ரவி, வெங்கடேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட வார்டுகளை பற்றி மட்டுமே பேச வேண்டும், மற்ற வார்டு பிரச்சினைகளில் தலையிடக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்து கூச்சலிட்டனர்.

    இதனால் அவையில் தி.மு.க.மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல், குழப்பம் நிலவியது.

    இதன் காரணமாக அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மேயர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்த பின் கூட்டம் தொடர்ந்தது.

    இதில் பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னீரப்பா, மாதேஸ்வரன் ஆகியோர் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் துப்புரவு பணியை, சிறப்பாகவும் செம்மையாகவும் மேற்கொண்டு வரும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினர்.

    கூட்டத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் சத்யா பேசுகையில், மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.

    மாநகராட்சி 4 மண்டலங்களுக்கான அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். மாநகராட்சி கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.

    3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தலாம் என்று விதிமுறை உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் கூட்டத்தில், ஜெயப்பிரகாஷ், மஞ்சுநாத், முருகம்மாள் மதன் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களும், மற்றும் தி.மு.க. உறுப்பினர்களும் தங்கள் வார்டு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.

    கூட்டத்தில் 199 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×