என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா கலையரங்கம்"

    • ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
    • நேரில் ஆய்வு செய்த பிறகு இறுதி செய்யப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் தலைமை தபால் அலுவலகம் அருகே 26,838 சதுரடி பரப்பளவு கொண்ட அண்ணா கலையரங்கம் கடந்த 1971-ம் ஆண்டு அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கலை நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கமாக இருந்த அண்ணா கலையரங்கம் மேம்படுத்தப்பட்டு 1978-ம் ஆண்டு திரையரங்கமாக மாறியது. 680 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகவும் கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை செயல்பட்டு வந்தது.

    அண்ணா கலையரங்கத்தில் மாறி வரும் காலத்துக்கு ஏற்ப பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால், அரங்கில் இருந்த இருக்கைகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், படங்கள் திரையிட்டும் ரசிகர்கள் வராததால் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது. அரசு நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெறாததால் அண்ணா கலையரங்கம் பூட்டப்பட்டது.

    கடந்த ஆண்டு வேலூரில் 'அண்ணா பல்நோக்கு கலை அரங்கம்' புதுப்பொலிவுடன் கட்ட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தற்போது உள்ள கட்டிடத்தை இடித்து விட்டு அண்ணா பல்நோக்கு கலை அரங்கம் கட்டுவதற்கு அனுமதி கோருவது தொடர்பாக மத்திய தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழக அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்க தொல்லியல் துறை அனுமதி மறுத்துவிட்டது.

    சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பு என்பதால் ரூ.10 கோடி நிதியை பயன்படுத்தும் வகையில் வேறு இடத்தில் அண்ணா பல்நோக்கு கலை அரங்கம் அமைக்க தொரப்பாடியில் 1 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக தேர்வு செய்துள்ளனர்.

    அந்த இடத்தை செய்தி மக்கள் தொடர்பு துறை செயலாளர் ஆய்வுக்குப் பிறகு அங்கு பல்நோக்கு கலை அரங்கம் அமைப்பது குறித்து இறுதி செய்யப்பட உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் கோட்டை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவு சுற்றளவில் அதிக உயரத்துடன் கூடிய கட்டிடங்கள் எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறைகளின்படி அண்ணா பல்நோக்கு கலை அரங்கம் அமைக்க கோரப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, மாற்று இடம் குறித்து வருவாய்த்துறையினர் உதவியுடன் ஆய்வு செய்ததில் தொரப்பாடியில் ஜெயில் மூலம் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் அருகில் பயன்பாட்டில் இல்லாத 1 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த இடம் நேரில் ஆய்வு செய்த பிறகு இறுதி செய்யப்பட உள்ளது என்றனர்.

    ×