என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிச் தெரு"

    • சிறு சிறு கடைகளாக செயல்படும் ரிச் தெரு காலையில் இருந்து இரவு வரை பிசியாக இருக்கும்.
    • ரிச் தெருவில் உள்ள சிறிய கடைகள் உரிமம் செலுத்தாததால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையையொட்டி 'ரிச் தெரு' என்ற பிரபலமான பகுதி உள்ளது. இதனை குட்டி ஜப்பான் என்று அழைப்பது உண்டு.

    எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல் மற்றும் அனைத்து விதமான தகவல் நுட்ப சாதனங்கள் இங்கு கிடைக்கும். சிறு சிறு கடைகளாக செயல்படும் ரிச் தெரு காலையில் இருந்து இரவு வரை பிசியாக இருக்கும்.

    சென்னை பகுதி மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பொருட்கள் வாங்க இங்கு வருவார்கள். வணிக பிரமுகர்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில் செய்து வருவதாக மாநகராட்சி தகவல் தெரிவிக்கிறது.

    ஆனால் இங்கு தொழில் செய்யக்கூடிய பெரும்பாலானவர்கள் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பல ஆண்டுகளாக பெறாமல் இருந்து வருகிறார்கள். தொழில் உரிமம், தொழில் வரி ஆகியவை முறையாக செலுத்தாமல் இருப்பதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ரிச் தெருவில் உள்ள 4 ஆயிரம் கடைகள் தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வருகிறது. அந்த கடைகளில் உரிமையாளர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி உரிமம் பெற அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னரும் உரிமம் பெறாதவர்கள் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் 120 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதே போல் மற்ற கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்படும்.

    மாநகராட்சியிடம் உரிமம் பெறாமல் எந்த தொழிலையும் செய்ய முடியாது. ஏற்கனவே செய்து வந்தாலும் தற்போது உரிமம் பெற்றாக வேண்டும். ரிச் தெருவில் உள்ள சிறிய கடைகள் உரிமம் செலுத்தாததால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை பார்த்துக்கொண்டு இனி இருக்க முடியாது. கமிஷனர் உத்தரவின் பேரில் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×