என் மலர்
நீங்கள் தேடியது "மேம்பாலம் அமைக்க நடவடிக்கை"
- கோவிலுக்கு பாதிப்பில்லாத வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை
- எம்.எல்.ஏ. உறுதி
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அக்ராவரம் மற்றும் மீனூர் கிராமத்திற்கு இடையே கவுண்டன்யா மகாநதி ஆறு செல்கிறது.
கவுண்டன்யா மகாநதியின் ஆற்றின் கரையில் கெங்கையம்மன் கோவில் அக்ராவரம்அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் மீனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்குகின்றனர் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.
சுமார் 2 மாதத்திற்கு மேலாகவும் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்லும் போது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அக்ராவரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிக்காக இப்பகுதிக்கு வர மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அக்ராவரம்- மீனூர் இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
நபார்டு திட்டத்தின் கீழ் அக்ராவரம்-மீனூர் இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு குறித்து கருத்துரை கேட்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் ஒன்றிய பொறியாளர் புவியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மேம்பாலம் அமைக்கும் போது கெங்கையம்மன் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள சில வீடுகள், பள்ளிக்குச் செல்லும் வழி அடைக்கப்படும் என கூறப்படுகிறது. மேம்பாலத்தை கட்டுவது தரைப்பாலமாக மாற்றி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது மீனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேம்பாலமாக கட்டி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கும், பள்ளிக்கும் பாதிப்பும் ஏற்படாத வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இதனை தொடர்ந்து அமலுவிஜயன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளிக்கும் கோவிலுக்கும் பாதிப்பில்லாத வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நடைபெறும் சமயத்தில் 2 பள்ளி சிறுவர்கள் அமுலு விஜயன் எம்எல்ஏைவ கட்டிப்பிடித்து மழைக் காலங்களில் பள்ளிக்கு வர முடியவில்லை விரைவாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் மாணவர்கள் நலனே முக்கியம் மேம்பாலம் கண்டிப்பாக கட்டி தரப்படும் என எம்.எல்.ஏ. உறுதி கூறி அனுப்பி வைத்தார்.






