என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சிளம் குழந்தைக்கு எலும்பு முறிவு"

    • சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பணியிலிருந்த ஒரு நர்சின் தாய் இறந்துவிட்டதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சிவகுமார் (வயது 23). இவருடைய மனைவி வசந்தா (22). இவர்களுக்கு 3 வயதில் மோனிஷ் என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் வசந்தா 2-வதாக கர்ப்பமடைந்தார்.

    கடந்த 20-ந் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை அனுமதித்துள்ளனர். அன்று மாலை அவருக்கு சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஆனால் டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் மட்டுமே பிரசவம் பார்த்ததால் அந்த குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தையின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காமல், ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நர்சுகள் அனுப்பி வைத்ததாக. மேலும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.

    ஓசூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்த போது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்கேன் செய்தபோது, குழந்தையின் கையில் 3 இடங்களில் முறிவு ஏற்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து, கையில் கட்டு போட்டனர். மேலும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதார துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

    பிரசவத்தின்போது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். பணியிலிருந்த ஒரு நர்சின் தாய் இறந்துவிட்டதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.அவரிடமும் விசாரணை நடத்திய பிறகு தவறு இருந்தால் துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×