என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை கடத்தி கொலை"

    • ஒரே ஒரு மகளை மட்டுமே பெற்றெடுத்துள்ள இளம்பெண்ணின் பெற்றோர், தலை தீபாவளிக்காக அழைப்பு விடுத்தனர்.
    • சரத்குமார், தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து நேற்று முன்தினம் தலை தீபாவளி கொண்டாடினர்.

    சோளிங்கர்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது22). இவர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடனமாடுவதற்கான இசை குழு நடத்தி வந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஆயலாம்பேட்டையை சேர்ந்த 19 வயது மாணவியை காதலித்தார்.

    இவர்களது காதல் விவகாரம் அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் காதல்மனைவியுடன் வசிக்க தொடங்கினார்.

    ஒரே ஒரு மகளை மட்டுமே பெற்றெடுத்துள்ள இளம்பெண்ணின் பெற்றோர், தலை தீபாவளிக்காக அழைப்பு விடுத்தனர். சரத்குமார், தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து நேற்று முன்தினம் தலை தீபாவளி கொண்டாடினர்.

    இரவு சரத்குமார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். அப்போது அவரது மாமனார் உமாபதியும் அவருடன் பைக்கில் சென்றார்.

    சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பங்க்கில் இரவு 7 மணியளவில் பெட்ரோல் போட முயன்றனர். அப்போது கையில் கத்தி, உருட்டுக் கட்டை என ஆயுதங்களுடன் 4 பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல் திடீரென சரத்குமாரை தாக்கினர்.

    தடுக்க முயன்ற மாமனார் உமாபதிக்கும் சரமாரி அடி, உதை விழுந்துள்ளது. இதில் உமாபதி லேசான காயமடைந்தார். பின்னர் சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்திச் சென்றது. அதிர்ச்சியடைந்த உமாபதி, அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    அங்கு வந்த அவர்கள் சரத்குமாரை தேடினர். இதற்கிடையில் சரத்குமாரை சுமார் 2 கி.மீ தூரத்துக்கு கடத்திய கும்பல், கூடலூர் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியது. சரத்குமாரை தேடிச்சென்ற மாமனார் உமாபதி மற்றும் உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரத்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார். சோளிங்கர் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அரக்கோணம் ஏஎஸ்பி கிரிஷ் யாதவ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    முன்விரோதம் காரணமாக யாராவது கூலிப்படையை ஏவி சரத்குமாரை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கொலை தொடர்பாக உறவினர்கள் உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ×