என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் நுட்பத்தில் முன்னணி"

    • வி.ஐ.டி. இஸ்ரோ கண்காட்சி தொடக்க விழாவில் வேந்தர் விசுவநாதன் பேச்சு
    • பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

    வேலூர்:

    உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு விஐடியில் இஸ்ரோவின் 3 நாள் கண்காட்சியை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இந்தியா வளர்ந்த நாடுகளோடு விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தோடு போட்டி போட்டு வருகிறது. அமெரிக்காவும், சோவியத் யூனியன் நாடுகளும் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் போட்டி யிட்டு வந்த காலம் மாறி தற்போது இந்தியாவும் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.

    தொழில்நுட்பம், மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுள்ள தாக இருக்க வேண்டும். கல்வியால் மட்டும் தான் அறியாமையையும், மக்களின் ஏழ்மைையயும் அகற்ற முடியும். இதற்கு மத்திய, மாநில அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார்.

    சிறப்பு விருந்தினரான ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜிவ் சிங் பேசியதாவது:-

    மாணவர்கள் கருத்துக்களை உள்வாங்கி படிக்க வேண்டும், இவ்வாறு படிக்கும்போது மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உலக நாடுகளில் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பொருத்தவரை இந்தியா முதல் 5 இடங்களுக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பண்டைய காலத்தில் இந்தியாதான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தது. எதிர்வரும் காலங்களில் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் விண்வெளி ஆய்வுக்கு தேவையான பல்வேறு உதிரிபாகங்களை பெல் நிறுவனம் தயாரித்து கொடுப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.

    கவுரவ விருந்தினராக பங்கேற்ற சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் சையது அமித் பேசியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் உலக விண்வெளி வாரம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்காக பிரத்தியோகமாக நடைபெற்று வருகிறது.

    காரணம் மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சம்பந்தப்பட்ட விஷ யங்களை மக்கள் அனை வரும் தெரிந்து கொள்ள வேண்டும் .

    இந்திய விண்வெளித்துறையின் தந்தையாக கருதப்படும் டாக்டர். விக்ரம் சாராபாய் 1960-களில் விண்வெளி ஆய்வு மற்றும் அதன் பயன்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கிணையாற்றும் என்று அப்போதே கணித்தார்.

    இந்தியா, விக்ரம் சாராபாய் போன்ற தலைவர்களின் தலைமை யாளும், தொலைநோக்குப் பார்வையாலும் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்று சாமானிய மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது எனக் கூறினார்.

    இந்தக் கண்காட்சி வி.ஐ.டி.யில் 9-ந் தேதி வரை நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, போஸ்டர் மற்றும் மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் கிடையாது. மாணவர்கள் https://wsw.vit.ac.in இணையம் வழியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    விழாவில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் , ஜி.வி.செல்வம் இணை துணை வேந்தர் டாக்டர். எஸ். நாராயணன். பதிவாளர் டாக்டர். டி. ஜெயபாரதி, வேலூர் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் முனுசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    ×