என் மலர்
நீங்கள் தேடியது "கருப்புப் பணமாக கைமாற்றி வருகின்றனர்"
- கமிஷனுக்கு கடத்திய சென்னை வியாபாரி
- போலீசாரிடம் பேரம் பேசிய கும்பல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் காரில் இருந்து லாரியில் ஏற்றி கடத்த முயன்ற ரூ.14.71 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த நிஷார் அகமது, வாசிம்அக்ரம், நாசர் சர்புதீன் ஆகியோரை பள்ளி கொண்டா போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14.71 கோடி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்:-
பிடிபட்ட நிஷார் அஹ்மது சென்னையில் குர்தா விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், கமிஷனுக்கு ஹவாலா பணத்தை எடுத்துச் செல்லும் தரகராக செயல்பட்டு வந்துள்ளார். சென்னையில் உள்ள தங்க நகைக்கடைகளுக்கு கோவையில் உள்ள வியாபாரிகள் மூலம் பல விதமான தங்க நகைகளை அனுப்பி வைக்கின்றனர்.
இதற்கான பணத்தை வியாபாரிகள் சிலர் வரி செலுத்தாமல் கருப்புப் பணமாக கைமாற்றி வருகின்றனர்.
இதுபோன்ற தொடர்புகள் சென்னை, கோவை, கேரளா வரை உள்ளது. இதில், நிசார் அஹ்மது ஒரு லட்சம் ரூபாய்க்கு 50 வீதம் கமிஷன் பெற்று பணத்தை கடத்தி வருகிறார். மாதத்துக்கு 2 அல்லது 3 முறை இப்படி பணப்பரிமாற்றம் நடந்து வருகிறது.
அதேபோல், கேரளாவில் இருந்து கோவைக்கு மரத்தூள் ஏற்றி வந்த சர்புதீன், நாசர் ஆகியோர் ஊர் திரும்பும் முன்பாக கோவைக்கு பணம் கடத்துவதற்காக வந்து போலீசாரிடம் சிக்கி உள்ளனர். 4 பேரின் செல்போன் எண்களைக் கொண்டு, கடந்த ஓராண்டில் இவர்கள் எத்தனை முறை வேலூர் வழியாக வந்து சென்றுள்ள னர் என்று ஆய்வு செய்யப்படும்.
அவர்களது செல்போன்கள் சைபர் பிரிவு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணம் பிடிபடும்போது பணியில் இருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிசார் அஹ்மதுவுக்கு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் பணம் கொடுக்கச் சொல்லிய நபரின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது'' என்றனர்.
போலீசாரிடம் பேரம் பேசிய கும்பல்
பணம் பிடிபட்ட நேரத்தில் போலீசாரிடம் கடத்தல் கும்பல் பேரம் பேசிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சோதனையின் போது பணம் இருப்பது குறித்து இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் கருணாகரன் பணம் குறித்து விசாரித்தார்.அவர்கள் எங்களை விட்டு விடுங்கள் இந்த பணத்தில் பாதியை அப்படியே கொடுத்து விடுகிறோம் என்று பேரம் பேசினர்.
அவர்களிடம் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் முதலில் சாப்பிட்டீர்களா என இன்ஸ்பெக்டர் விசாரித்தார். அப்போது கும்பல் பசிக்குது சார் சாப்பிடணும் என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று நைசாக பேசி விட்டு கூடுதல் போலீசாரை வரவழைத்து அவர்களை கைது செய்துள்ளனர்.இந்ந சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






