என் மலர்
நீங்கள் தேடியது "பட்டா வழங்கியதை ரத்து செய்ய கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்"
- அரசுக்கு சொந்தமாக மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலம் உள்ளது.
- கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், ஒட்டப்பட்டி ஊராட்சியில் உள்ள புளியாண்டப்பட்டி மாதம்பதி உள்ளிட்ட கிராமங்களுக்கு மத்தியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமாக மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் அடர்ந்த காட்டு கருவேல மரங்கள் வளர்ந்து இருக்கும் நிலையில் இந்த புறம்போக்கு நிலத்தில் பட்டா மாற்றத்தின் பொழுது புளியாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த அலமேலு முருகேசன் என்பவருக்கு 3,1/2 ஏக்கர் நிலம் தவறுதலாக வழங்கப்பட்டுள்ளது.அந்த பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்தில் நீர்நிலை குட்டை இருப்பதாகவும் இதுகுறித்து பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கவனத்தில் கொண்டு சென்று மனு அளித்த நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கக் கூடாது என்றும் நீர்நிலை, காடு, வனங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் புளியாண்டப்பட்டி, மாதம்பதி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்காத நிலையில் உடனடியாக கிராம மக்கள் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகத்திடம் கேட்டபோது இந்த நிலம் யூடிஆர் பட்டா வழங்கும் பொழுது தவறுதலாக வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறி உள்ளனர். அது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிலம் குறித்து சென்னை ஆவணக்காப்பகத்தில் அதற்குண்டான ஆவணங்களை கேட்டுள்ளோம். அந்த ஆவணங்கள் அடிப்படையில் கிராம மக்கள் கூறுவது போல் இருந்தால் அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்களிடம் விளக்கம் பெற்றவுடன் மேற்கண்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்று உறுதி அளித்தார்.






