என் மலர்
நீங்கள் தேடியது "அறந்தாங்கி அரசு மருத்துவமனை"
- மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சாலையின் ஓரத்தில் கொட்டிக்கிடந்த ஜல்லிகற்கள் மீது விழுந்துள்ளார்.
- காலின் கட்டை விரல் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெருங்குடி ஆவணம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், அறந்தாங்கியில் இருந்து பெருங்குடி ஆவணத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுல்லனி என்ற இடத்தில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் குறுக்கே மாடு ஒன்று திடீரென்று பாய்ந்தது.
அப்போது மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சாலையின் ஓரத்தில் கொட்டிக்கிடந்த ஜல்லிகற்கள் மீது விழுந்துள்ளார். இதில் காலின் கட்டை விரல் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கால் பகுதியை சுத்தம் செய்து தையல் போடப்பட்டது.
அதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவருக்கு காலில் வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மதிவாணன் மறுநாள் தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்துள்ளார். அப்போது கால் கட்டை விரல் பகுதியில் அடிபட்டதில் ஜல்லி கற்கள் இருப்பது ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டது.
தொடர் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கற்களை அகற்றி மீண்டும் தையல் போட்டனர். விபத்தில் கால் கட்டை விரல் பகுதியில் அடிபட்டு ஜல்லி கற்கள் உள்ளே இருப்பதை கூட முறையாக கண்டறியாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






