என் மலர்
நீங்கள் தேடியது "பண்ருட்டி தீவிபத்து"
- பண்ருட்டி அருகே முந்திரி எண்ணை தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தது.
பண்ருட்டி:
பண்ருட்டி போலீஸ் லைன் 6-வது தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் அ.தி.மு.க. பிரமுகர். இவருக்கு சொந்தமான முந்திரி எண்ணெய் தயாரிக்கும் கம்பெனி பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம், ஆண்டிகுப்பம் வீராணம் தெருவில் உள்ளது.
இந்த கம்பெனியை விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (47) என்பவர் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு வேலை முடிந்து ஆலையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
நள்ளிரவு 1 மணியளவில் முந்திரி எண்ணெய் ஆலை திடீர் என தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் ஆலையில் உள்ளே இருந்த 1500 மூட்டை முந்திரி, 500 லிட்டர் முந்திரி எண்ணெய் முழுவதும் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், முத்தாண்டிகுப்பம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் பண்ருட்டி நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விடிய, விடிய தீயை அணைக்கும் பணி நடந்தது. 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தது.
பண்ருட்டி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.






