என் மலர்
நீங்கள் தேடியது "5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை"
- 19 ஆயிரத்து 478 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
- இதனால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
தொடர் கன மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து 19 ஆயிரத்து 478 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பெய்த கனமழையாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3,549 கனஅடியாக நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 9,215 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.75 அடியாக இருந்தது. இதனால் அணையில் 6 மதகுகள் வழியாக வினாடிக்கு 8200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 11 தடுப்பணைகளை கடந்து பிற்பகல் 1 மணியளவில், கிருஷ்ணகிரி அணைக்கு வந்தது.
இதனால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி பிற்பகல் 2 மணியளவில், அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 454 கனஅடியாகவும், நீர்மட்டம் 50.80 அடியாக இருந்ததால், 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 19 ஆயிரத்து 478 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.
கிருஷ்ணகிரி அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 10-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், நெடுங்கல் உட்பட தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும் கிராம மக்களுக்கு தொடர்பு ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாரும் தென்பெண்ணை ஆற்றங்கரை அருகில் வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
மேலும், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






