என் மலர்
நீங்கள் தேடியது "சிறுத்தை தாக்கி 20 ஆடுகள் பலி"
- சிறுத்தை நுழைந்து அங்குள்ள குதிரையை கடித்து கொன்றுவிட்டு சென்றது .
- 20 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருக்கும் சிறுத்தைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் அடிக்கடி நுழைவது வழக்கமாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளி அருகே உள்ள குதிரைப் பண்ணையில் சிறுத்தை நுழைந்து அங்குள்ள குதிரையை கடித்து கொன்றுவிட்டு சென்றது . இந்நிலையில் சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (வயது 50) என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று வனப்பகுதி அருகில் மேய்த்துவிட்டு இரவு வீட்டின் முன்பு உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கிராமத்திற்குள் நுழைந்து பட்டியில் அடைத்திருந்த 20 ஆடுகளை கடித்து குதறி ரத்தத்தை குடித்து சென்றுள்ளது.
ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு மாதேஷ் வெளியே வந்த பார்த்தபோது பட்டியில் இருந்து 20 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். இதனை கேட்டு கிராம மக்கள் வெளியே வந்துள்ளனர். அருகில் சிறுத்தையின் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட கிராம மக்கள் அலறியடித்து வீட்டிற்குள் சென்று பதுங்கிகொண்டனர்.
சிறிது நேரம் கழித்து சிறுத்தையின் உறுமல் சத்தம் நின்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனசரகர் சுகுமார் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சிறுத்தை யை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டு விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மக்கள் வெளியே வரவேன்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.






