என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்"

    • தற்போது ஆடிட்டிங் பணி நடைபெற உள்ளதால், அதில் இருந்து தப்பிக்க தனது அலுவலகத்தில் பணியாற்றும் தினேசை வைத்து ஆவணங்களுக்கு தீ வைக்க முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்து.
    • இதையடுத்து அரசு ஆவணங்களை எரித்ததாக கூறி தினேஷ், பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகை அருகே அரசு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது.

    இந்த சங்கத்தில் இருந்து ஆசிரியர்கள் கடன் பெற்ற ஆவணங்கள் அனைத்தும் இந்த கட்டிடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சென்றபோது ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறை உள்ளிட்ட 2 அறைகளின் கதவுகள் திறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதனால் திட்டமிட்டு யாரேனும் தீ வைத்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஒரு நபர் அதிகாலையில் வந்து அறைக்கு தீ வைத்து சென்றது உறுதியானது.

    அந்த நபர் யார் என்பது குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், அதே சிக்கன நாணய சங்கத்தில் தற்காலிகமாக கிளார்க் வேலை பார்க்கும் பாளை தெற்கு பஜாரை சேர்ந்த தினேஷ்(வயது 30) என்பது தெரியவந்தது.

    உடனே அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சங்கத்தின் தலைவராக கயத்தாறு அருகே உள்ள இலந்தைகுளத்தை சேர்ந்த பிரபாகரன்(52) என்பவர் இருந்து வருகிறார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மானூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பிரபாகரன் சட்ட விரோதமாக அதிக அளவு தொகையை கடனாக சங்கத்தில் இருந்து பெற்றுள்ளார்.

    தற்போது ஆடிட்டிங் பணி நடைபெற உள்ளதால், அதில் இருந்து தப்பிக்க தனது அலுவலகத்தில் பணியாற்றும் தினேசை வைத்து ஆவணங்களுக்கு தீ வைக்க முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்து.

    இதையடுத்து அரசு ஆவணங்களை எரித்ததாக கூறி தினேஷ், பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது பிரபாகரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ×