என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாத்தா பேத்தி மரணம்"

    • மழை வந்தால் வைக்கோல் நனைந்து விடும் என்று எண்ணிய வெங்கடேசன் வைக்கோல் மீது தார்ப்பாய் போட்டு மூடுவதற்காக தனது பேத்தி லாவண்யாவுடன் விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • தென்னை மரம் உடைந்து விழுந்ததில் தாத்தா, பேத்தி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ஆயிரம் மங்கலம், பாடசாலை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 70). விவசாயி. இவரது மகள் இந்திராணி. பேத்தி லாவண்யா (17). இந்திராணியின் கணவர் இறந்து விட்டதால் தனது மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    வெங்கடேசனுக்கு ஊருக்கு வெளியே விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் வைக்கோல் போர் போட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை ஆயிரம் மங்கலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை வந்தால் வைக்கோல் நனைந்து விடும் என்று எண்ணிய வெங்கடேசன் வைக்கோல் மீது தார்ப்பாய் போட்டு மூடுவதற்காக தனது பேத்தி லாவண்யாவுடன் விவசாய நிலத்திற்கு சென்றார்.

    வைக்கோல் போரை தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டு இருந்தனர். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் அங்கிருந்த தென்னை மரம் உடைந்து வெங்கடேசன் மற்றும் அவரது பேத்தி லாவண்யா மீது விழுந்தது. இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன், லாவண்யா ஆகியோரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னை மரம் உடைந்து விழுந்ததில் தாத்தா, பேத்தி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×