என் மலர்
நீங்கள் தேடியது "COUNCILORS கவுன்சிலர்கள்"
- புதிதாக தெருவிளக்கு அமைத்தல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையல் கூடம் கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- 21 கவுன்சிலர்களில் 7 திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ஒருவரும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் என மொத்தம் 9 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று அதன் கூட்டுமன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) மனோகர், துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசினர்.
நகராட்சி அலுவலர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார். இதில் புதிதாக தெருவிளக்கு அமைத்தல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையல் கூடம் கட்டுதல், புதிதாக காவேரி குடிநீர் இணைப்பு வழங்கல்,சிறு பாலம் அமைத்தல், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தல், தலைவருக்கு புதிதாக கார் வாங்குதல் என்பது உட்பட 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மொத்தம் உள்ள 21 கவுன்சிலர்களில் 7 திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ஒருவரும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் என மொத்தம் 9 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால் கலந்து கொண்ட 8 திமுக கவுன்சிலர்கள், 3 அதிமுக கவுன்சிலர்கள், ஒரு சுயேட்சை கவுன்சிலர்கன் என 12 கவுன்சிலர்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சியில் திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் கலந்து கொள்ளதாத திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், வார்டு பகுதிகளில் உள்ள குறைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்வோம் என கூறி ஓட்டு கேட்டு வெற்றிப்பெற்றுள்ளோம். ஆனால் வார்டு பகுதிகளில் செய்யவேண்டிய வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் மறுக்கிறது. இதனால் நகராட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தால் தான் நாங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தோம்.
எனவே வரும் காலங்களில் மக்கள் நலன் கருதி கவுன்சிலர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற நகர்மன்றமும், நகராட்சி நிர்வாகமும் முன்வரவேண்டும் என்றனர்.






