என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள் போராட்டம்"

    • கிருஷ்ணகிரி தனியார் பள்ளி, கல்லூரி சார்பில் போராட்டம் நடந்தது.
    • பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி பள்ளியில் இறந்து கிடந்தார். பள்ளி தரப்பில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் கலவரமாக மாறியது.இதில் பள்ளியில் இருந்த 20க்கும்மேற்பட்ட பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் வகுப்பறைகள் சூறையாடப்பட்டன.

    சான்றிதழ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தை கண்டித்தும், பள்ளிகளுக்கும், அதில் பணியாற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நேற்று மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

    அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஆடிட்டர் கொங்கரசன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட எஸ்பி., சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழகத்தில் அவ்வபோது தனியார் கல்வி நிறுவனங்களில் பெற்றோர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோத செயல்களை நடத்தி கொண்டு கல்வி நிறுவனங்களின் சொத்துக்களை சூறையாடி வருகிறார்கள். மேலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இலலாத நிலையில் பள்ளி நிர்வாகிகள் இருக்கிறோம். எனவே அரசு எங்களுக்கும், எங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், சொத்துக்களுக்கும், பள்ளி வாகனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து செயலாளர் ஆடிட்டர் கொங்கரசன் நிருபர்களிடம் கூறியதாவது: சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 5 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவி ஒருவர் இறந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளி சொத்துக்களை தீ வைத்து கொளுத்தி உள்ளனர். உடமைகளை திருடிச் சென்றுள்ளனர். இதனால் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேற்றைய தினம் பள்ளியில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளியில் புகுந்து திருடுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு நிறைவேற்றி உள்ளார்கள்.

    தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பதற்காக இன்றைய தினம் நாங்கள் கலெக்டர், மாவட்ட எஸ்பி&ஐ சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில துணை செயலாளர் குருஜி பாண்டியன், மாவட்ட பொருளாளர் அன்பரசன், நிர்வாகிகள் பிருத்விராஜ், பிரேம் மோகன், மாருதி ஜெயராமன், ரவிச்சந்திரன், நரேன்ராஜ், பிராங்கிளின், ஜேம்ஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×