என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.45 லட்சம் மோசடி"

    • சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தன. தகுதியற்ற நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, வீடு கட்டுவதற்கு ஆணை பெற்றுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட முதல் மற்றும் 2-ம் கட்ட தவணைத் தொகையை பயன்படுத்தாமல், சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக கூறப்பட்டது.

    இது குறித்து முந்தைய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் தற்போதைய கலெக்டர் முருகேஷ் ஆகியோரிடம் ஆரணி எம்.பி., விஷ்ணு பிரசாத் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் கடந்த 3 வாரங்களாக ஆய்வு செய்து வருகிறார்.

    மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும், தனித்தனியாக ஆய்வு நடத்தப்படுகிறது. அப்போது நிலுவையில் உள்ள பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கலெக்டர் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையில், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டதின் கீழ் 2016-17-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரை பணிகளை தொடங்காதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், முதல் தவணை தொகையை பெற்றுக்கொண்டு, 175 பயனாளிகள் வீடு கட்டும் பணியை தொடங்காமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க கலசப்பாக்கம், கடலாடி, போளூர் மற்றும் மங்கலம் போலீஸ் நிலையங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகர் வீ.கோவிந்தராஜிலு புகார் தெரிவித்துள்ளார்.

    அவர் அளித்துள்ள புகார் மனுவில்:-

    "கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் (2016-17 முதல் 2019-20 வரை) வீடு கட்ட வேலை உத்தரவு வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு முதல் தவணை தொகையாக ரூ.26,029, சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இவர்களில் 175 பயனாளிகள், வீடு கட்டும் பணியை தொடங்கவில்லை. மேலும், வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட அரசு பணத்தை, வீடு கட்ட பயன்ப டுத்தாமல் முறைகேடு செய்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மட்டும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.45,62,075 நிதி மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள இதர ஒன்றியங்களிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கும் பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×