என் மலர்
நீங்கள் தேடியது "ஒரு வார காலத்திற்குள் கடன் வழங்க உத்தரவிட்டார்"
- வீட்டுமனை பட்டா உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
- கழிவு நீர் கால்வாயை சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமத்திற்கு நேற்று மாலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வருகை தந்தார். அப்போது கதிர்குளம் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்க கோரிக்கை தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து ஆய்வின் போது உடனிருந்து முன்னோடி வங்கி மேலாளரிடம் அவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் கடன் வழங்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து அந்த கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவிகளிடம் உரையாடினார். 100 நாள் வேலை மற்றும் வீட்டுமனை பட்டா ஆகியவற்றை உடனடியாக செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து குடியாத்தம்-பரதராமி நெடுஞ்சாலையில் கல்லப்பாடி கிராமம் அருகே நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சாலையை ஒட்டியபடி அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாய்கள் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது கழிவு நீர் கால்வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லுமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும் என அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ். தனஞ்செயன், குடியாத்தம் தாசில்தார் எஸ்.லலிதா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், உதவி பொறியாளர் என். ராஜ்குமார், கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் உடன் இருந்தனர்.






