என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நதியின் குறுக்கே ரூ.3.33 கோடியில் தடுப்பணை"

    • ரூ.3.33 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
    • ஏரிகளை ரூ.3.83 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா குந்தப்பள்ளியில் மார்க்கண்டேயன் நதியின் குறுக்கே பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் ரூ.3.33 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.

    ஏரிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் சூளகிரி தாலுகாவில் உள்ள அத்திமுகம் தளவாய் ஏரி, கோவிந்த கவுண்டன் ஏரி, கோவிந்த கவுண்டன் ஏரி, குப்பம்மா ஏரி ஆகியவை ரூ.3.83 கோடி மதிப்பில் புனரமைக்கப்படுகிறது.

    இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.-ஸ்டாலின் விவசாயத்திற்கும், நிலத்தடி நீரை செறிவூட்டவும்,குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எண்ணற்ற திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மூலம் கிருஷ்ணகிரி தாலுகா குந்தப்பள்ளி கிராமம் அருகே மார்கண்டேய நதியின் குறுக்கே ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி, கட்டப்படும் புதிய தடுப்பணையின் மூலம் குந்தப்பள்ளி, லக்கபத்தலப்பள்ளி, பீமாண்டப்பள்ளி, மாரசந்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 76 கிணறுகள் மறைமுக பாசன வசதி பெறும்.

    இத்திட்டத்தின் மூலம் சுமார் 402 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் புதிய தடுப்பணையானது 1.50 மீட்டர் உயரத்திற்கும், 62 மீட்டர் நீளத்திற்கும் அமைக்கப்பட உள்ளது.

    அதே போல, ஏரிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள ஏரிகளை புனரமைப்பு செய்யும் பணிகளுக்காக ஒப்புதல் வழங்கப்பட்டு, சூளகிரி தாலுகாவில் உள்ள அத்திமுகம் தளவாய் ஏரி, கோவிந்த கவுண்டன் ஏரி, குப்பம்மா ஏரி ஆகிய ஏரிகளை ரூ.3.83 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் ஏரிகள் தூர்வாரி அதன் கரைப் பகுதியை மண் கொட்டி பலப்படுத்துதல், ஏரியில் உள்ள மதகுகளை பழுது பார்த்தல், ஏரிக்கு வரும் வரத்து கால்வாயினை தூர்வாரி பலப்படுத்துதல், ஏரியின் மிகை நீர் செல்லும் கால்வாயினை தூர்வாரி பலப்படுத்துதல், ஏரியின் பாசனக் கால்வாயை தூர்வாரி புதுப்பித்தல் போன்ற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதனால் பாசன பரப்பு 292.92 ஹெக்டர் (723.80 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொ றியாளர் குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் தேன்மொழி, சதீஷ்குமார், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர்கள் அறிவழகன், உதயகுமார், அறிவொளி, பொன்னி வளவன், உதவி பொறியா ளர்கள் பார்த்திபன், கார்த்திகேயன், தாசில்தார்கள் நீலமேகன், தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×