என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கொம்பு-வண்ணத்துப்பூச்சி பூங்கா இணைப்பு சாலை பணிகள் தீவிரம்"

    • திருச்சியில் சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் முக்கொம்பு-வண்ணத்துப்பூச்சி பூங்காவை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • முக்கொம்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஊசி பாலம் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையின் மதகுகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக நீர் வரத்தால் உடைந்தது. இதையடுத்து ரூ.387.6 கோடியில் புதிய அணை கட்டும் பணி நடந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அவ்வப்போது தடைபட்ட இந்த அணைக் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    தானியங்கி ஷட்டர்கள் வழியாக நீர் வெளியேற்றும் சோதனை நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக காவிரிக்கரையை ஒட்டி முக்கொம்பில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவை இணைக்கும் புதிய சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

    அந்தப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த புதிய சாலை 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மண் நிரப்பி, அதன்மேல் ஜல்லிகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் முக்கொம்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஊசி பாலம் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சாலை பணிகள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய சாலை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

    குறிப்பாக ஸ்ரீரங்கம் வரும் சுற்றுலா பயணிகள் வண்ணத்துப்பூச்சி பூங்கா சென்றுவிட்டு அங்கிருந்து நேராக நெரிசலில் சிக்காமல் முக்கொம்பு அணைக்கட்டுக்கு 10 நிமிடத்தில் செல்ல முடியும். முக்கொம்பு அணையிலிருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு செல்ல விரும்புபவர்களுக்கும் இந்த சாலை தூரத்தை குறைக்கும்.

    இதன் மூலம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் 27 ஏக்கர் பரப்பளவிலான வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோடை விடுமுறையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.

    அவர்களுக்கு வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பயனுள்ள பல அம்சங்கள் சிறப்புற அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. வனத்துைறயினரின் அதீத முயற்சியால் பூங்காவிற்கு வருகை தரும் சிறியோர் முதல் பெரியோர் வரை பல்வேறு அனுபவங்களை தாங்கி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


    ×