என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்குன்றத்தில் லாரி அதிபர் கடத்தல்"

    சென்னை செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரை மீட்ட போலீசார் துப்பாக்கி முனையில் 8 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இருப்பினும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் அவ்வப்போது வன்முறை செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

    சென்னையை பொறுத்தவரையில் ரவுடிகளுக்கு இணையாக வழிப்பறி கொள்ளையர்களும் அட்டகாசம் செய்து வருகின்றனர். இவர்களையும் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

    ஆனால் குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போலீசார் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் நடந்தது.

    நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரர் ஏழுமலை சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிடிபட்ட ரவுடிகளில் ஒருவனான ஆனந்தன், என்கவுண்டரில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானான்.

    தென்சென்னை பகுதியில் நடந்த என்கவுண்டர் பரபரப்பு அடங்கும் முன்னரே வடசென்னையில் தொழில் அதிபரை கடத்திய ரவுடிகள் 8 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    செங்குன்றம் கரிகாலன் நகர் மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (53) லாரி அதிபரான இவர் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2-ந்தேதி திடீரென கணேசன் மாயமானார். மாலையில் வெளியில் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை கணேசன் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கலக்கம் அடைந்தனர்.

    நேற்று மாலை வரையில் வீடு திரும்பாததால் இது பற்றி கணேசனின் உறவினர் ராமச்சந்திரன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் ராமச்சந்திரனுக்கு போன் செய்த கணேசன், தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

    இதுபற்றி போலீசில் தெரிவிக்க வேண்டாம் என்றும், பணத்தை தயார் செய்யுமாறும் கூறிவிட்டு கணேசன் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இந்த தகவல் தெரிய வந்ததும், கணேசனை பத்திரமாக மீட்கவும், கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி வேட்டையை தொடங்கினர். வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் ஜெயராம் மேற்பார்வையில், இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை ஆணையர் கலைச்செல்வன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    புழல் உதவி கமி‌ஷனர் பிரபாகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீசார் நேற்று இரவு முழுவதும் கடத்தல் கும்பலை சல்லடை போட்டு தேடினர்.

    கடத்தப்பட்ட லாரி அதிபர் கணேசனின் செல்போனை வைத்து அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். கூடுவாஞ்சேரி பகுதியில் கணேசன் காரிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து நேற்று இரவு 9.30 மணி அளவில் போலீசார் துப்பாக்கி முனையில் 8 ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.

    இந்த கடத்தலுக்கு செங்குன்றத்தை சேர்ந்த வடகரை சக்தி என்ற சக்திவேல் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரையும் அவரது கூட்டாளிகள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருப்போரூரை சேர்ந்த சுமன், எண்ணூர் மதன் குமார், ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டை மண்டபம் பகுதியை சேர்ந்த கணேஷ், குரோம்பேட்டை அசோக் குமார், செங்குன்றத்தை சேர்ந்த ராஜேஷ், சதீஷ் குமார், சிவா ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கினர்.

    இவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் கால் நகத்தை பிடுங்கி எறிந்து விடுவோம் என்றும் கணேசனை ரவுடிகள் மிரட்டியுள்ளனர். இதற்காக கட்டிங்பிளேயர் போன்ற ஆயுதங்களையும் காட்டி கணேசனை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 8 ரவுடிகளும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
    ×