என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக வக்கீல்"

    வருகிற 6-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிடாவிட்டால் நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று தி.மு.க. வக்கீல் பி.வில்சன் கூறியுள்ளார்.
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணையை வருகிற 6-ந்தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கில் அதிரடி திருப்பமாக இது அமைந்துள்ளது.

    இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-


    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் 3 முறை உத்தரவு பிறக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கோர்ட்டின் உத்தரவை அவமதிப்பு செய்வதாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தி.மு.க. சார்பில் தொடரப்பட்டது.

    இதில் வருகிற 6-ந்தேதி கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடம் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இது கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் ரூ.4000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு யார் காரணம். தேர்தல் ஆணையத்தின் தாமதமான செயல்பாட்டால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைக்காமல் போய்விட்டது.

    இனியும் தேர்தலை தாமதம் செய்யக் கூடாது கோர்ட்டு உத்தரவின்படி 6-ந்தேதி தேர்தல் அட்டவணையை சமர்ப்பிக்காவிட்டால் மாநில தேர்தல் அதிகாரிகள் நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×