என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா சாலையில் விரிசல்"

    செங்கோட்டை அருகே கேரளா சாலையில் விரிசல் அதிகரித்துள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.
    செங்கோட்டை:

    தமிழக, கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக தினமும் 24 மணி நேரமும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்று வருகின்றன. இந்த பாதையில் கோட்டைவாசல் தாண்டி ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடி முதல் தென்மலை வரை மலைப் பாதையாகும். மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகள் இதில் உள்ளன.

    தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்று வருவதால் இந்த வழியில் அடிக்கடி சாலை பழுதாகும். அதை அடுத்து இந்தச் சாலைகளை கேரள மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கும் அதிகமான அளவு இந்தப் பகுதிகளில் பெய்து வருவதால் கல்லடா தென்மலை 13 கண் பாலம் அருகே சாலையில் விரிசல் உருவாகி அருகிலுள்ள கல்லடா ஆற்றில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதனைக் கருத்தில் கொண்டு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட நிர்வாகம் இந்த சாலையில் கனரக வாகனங்கள் 10 டன்னுக்கு அதிகமான அளவு கொண்ட பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை பாதை சரி செய்யும் வரை தடை செய்ய உத்தரவிட்ட‌து. தற்போது இந்த விரிசல் அதிகமாகியிருப்பதால் சிறிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சாலையில் நிலைமை குறித்து தமிழக கேரள எல்லையான புளியரையிலுள்ள போக்குவரத்து சோதனைச் சாவடி, காவல்துறை சோதனைச் சாவடிகளுக்கும் தகவல்களை தெரிவிக்கப்பட்டது.

    புளியரை காவல்துறை மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடியில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 10 டன்னுக்கு அதிக பாரம் கொண்ட அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனிடையே கொல்லம் ரெயில்பாதையில் தண்டவாளத்தில் கிடந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதையை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

    ×