என் மலர்
நீங்கள் தேடியது "நகைக்கடையில் கொள்ளை முயற்சி"
பாகூர்:
புதுவை ரெயின்போநகரை சேர்ந்தவர் முகேஷ் (வயது37) இவர் கடந்த 10 ஆண்டுகளாக தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் மெயின்ரோட்டில் அடகு கடையுடன் கூடிய நகைக்கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் முகேஷ் நகைக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு செல்லும் போது நகை மற்றும் பணத்தை லாக்கரில் பூட்டி வைத்து விட்டு சென்றார்.
இன்றுகாலை முகேஷ் வழக்கம் போல் நகைக்கடையை திறக்க வந்தார். அப்போது நகைக்கடையில் கிரீல்கேட், ஷெட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். மொத்தம் 8 பூட்டுகளை மர்ம நபர்கள் வெல்டிங் மூலம் உடைத்துள்ளனர். நகைக்கடையில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு பணம் மற்றும்நகை வைத்திருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கர் உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றுள்ளனர்.
இதனால் லாக்கரில் இருந்த பணம், அடகு நகைகள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் என பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பின. இது குறித்து முகேஷ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.
கொள்ளை முயற்சி நடந்த இடம் எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். அப்படி இருக்க மர்ம நபர்கள் துணிச்சலாக வெல்டிங் மெஷினை எடுத்து வந்து பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை முயற்சி நடந்த நகைக்கடையில் ஏற்கனவே 7 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நகைக்கடையின் பின்பக்கமாக சுவரில் துளைபோட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.






