search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siege and struggle"

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏலகிரி ஏரி உள்ளது. இந்த ஏரியானது 1890 இல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சர்வே எண் 116 ல் 88 ஏக்கர் பரப்பளவை கொண்டிருந்தது.

    கடந்த 2002-ம் ஆண்டு சர்வே எண் 94 ஆக மாற்றப்பட்டு ஏரியின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர் குறைந்த நிலையில் ஏரி பகுதியிலும், ஏரியின் சுற்றுப்பகுதியிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2002-ல் தமிழக அரசால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை அதிகாரிகள் மூலம் வருவாய் துறையினருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் உச்சநீதிமன்றம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துறை அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏலகிரி கிராமத்திற்கு உட்பட்ட ஏரி பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசித்து வரும் 48 பேருக்கு வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஏலகிரி கிராமம் ஊராட்சிக்குட்பட்ட 18 குடும்பங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அனைவரும் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் 150 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் அருணா, அதிமுக ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி ஜெயராமன், பாஜக ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஏலகிரி கிராம விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு தாங்கள் வசிக்கும் குடியிருப்பை அகற்றாமல் அதிகாரிகள் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் வருவாய்த் துறையும் பொதுப்பணி துறையும் ஏரியை முழுவதுமாக அளவீடு செய்யாமல் பாதி அளவிற்கு அளவீடு செய்து ஏரியின் உள்வாயில் உள்ள எங்களை அகற்ற துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    எனவே ஏரியை முழுவதுமாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனை அடுத்து துறை அலுவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்று நடக்க இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம், ஏரியை முழுவதும் அளவீடு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதின் அடிப்படையில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மேலும் இந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான், ஊராட்சி மன்ற தலைவர் ரகு, துணைத் தலைவர் ஜீவநாதன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.

    ×