search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seven districts"

    கஜா புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பாம்பன் - கடலூர் இடையே புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
    சென்னை:

    வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கடந்த 3 நாட்களாக மிரட்டிக் கொண்டு இருக்கிறது.

    முதலில் வடதமிழகத்தில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்ததால் மத்திய தமிழகத்தை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 11.30 மணிக்கு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 450 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.

    இந்தப் புயல் 38 கி.மீ. அகலத்தில் 200 கி.மீ. முதல் 300 கி.மீ. பரப்பளவில் நீள் வட்டத்தில் பரவியுள்ளது. நேற்று இரவு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த கஜா புயல் இன்று தீவிர புயலாக மாறி வேகம் எடுத்தது.

    காலையில் 14 கி.மீ. வேகத்திலும் 11 மணி அளவில் 23 கி.மீ. வேகத்திலும் நகர்ந்தது. மதியம் 12 மணி அளவில் 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் திடீரென்று 17 கி.மீ. வேகமாக குறைந்தது.

    இன்று மதியம் 12 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 284 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 245 கி.மீ. தொலைவிலும் கரையை நெருங்கி வந்துள்ளது.

    இன்று மாலை கரையை மேலும் நெருங்கி இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கடலூர்-பாம்பன் இடையே நாகை அருகே புயலாக கரையை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தீவிர புயலாக மாறியதால் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும். நாளை காலைதான் புயல் கரையை முழுமையாக கடந்து செல்லும்.

    எனவே இரவு தொடங்கி நாளை காலை வரை கடலோர பகுதியில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் சூறைகாற்றுடன் மிக பலத்த மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுச்சேரி தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வரை தமிழகத்தின் 7 மாவட்டங்களையும், காரைக்கால் பகுதியையும் புயல் தாக்கும் என்றும் இன்று காலை முதல் மிக கன மழை பெய்யத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கினாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கடல் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    நாளை புயல் தாக்கும் 7 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மிதமிஞ்சிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் போதும் கரையை கடந்த பின்பும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும். இந்த 7 மாவட்டங்களிலும் சேதம் கடுமையாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

    நாகை, வேதாரண்யம் ஆகிய ஊர்கள் புயல் தாக்கும் மையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகள் ஆக்ரோ‌ஷமாக எழும்புவதால் நீர் மட்டம் ஒரு மீட்டர் வரை உயரவும் வாய்ப்பு உள்ளது.

    இதனால் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஏராளமான புயல் நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதிகள் செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    புயல் கரையை கடக்கும் மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் 20 செ.மீ. வரை அதிக அளவு மழை கொட்டும் வாய்ப்புள்ளது. இதையடுத்து 7 மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

    மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை எண் 1070-லும், 32 மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை எண் 1077-லும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    கஜா புயலையொட்டி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ராமேசுவரம்- மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்- ஏக்கா (குஜராத்) செல்லும் ரெயில்கள் ராமேசுவரம்- மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எண்ணூர், கடலூர், புதுவை, காரைக்கால், நாகை, பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்த பின்பு நாளை திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். அதன் பிறகு 17-ந்தேதி கேரளா வழியாக அரபிக்கடலை அடைந்து புயலாக நீடிக்கும்.

    அதன்பிறகு படிப்படியாக வலு இழக்கும் என்று தன்னார்வ வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். #CycloneGaja #TNRains
    கஜா புயல் நாளை கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
    சென்னை:

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும்  நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றின் அமைப்பைப் பொருத்து புயலின் வேகம் இருக்கும். நாளை மாலை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.



    அப்போது, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CycloneGaja #TNRains
    ×