search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selva RK"

    பரியேறும் பெருமாள் படத்தில் எடிட்டராக பணியாற்றிய செல்வா, இப்படம் எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். #PariyerumPerumal
    இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’.

    கதை மாந்தர்கள், கதைக்களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக பரியேறும் பெருமாள் உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர். இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஈதர், கலை இயக்குநர் ராமு, எடிட்டர் செல்வா ஆர்.கே ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. 

    இவர்களில் குறிப்பாக படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே -வுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

    அடிப்படையில் விசுவல் கம்யூனிகேசன் படித்தவரான செல்வா, பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் இடம் ‘மங்காத்தா’ உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். பிறகு பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் அசோசியேட் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார். பின்னர் ஜெயம் ரவி நடித்த ‘அப்பாடக்கர்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் ராஜா மந்திரி, காலக்கூத்து, கத்திச் சண்ட, இவன் தந்திரன் படங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்படி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவரை "பரியேறும் பெருமாள்" ஜெட் வேகத்தில் பறக்கச் செய்திருக்கிறது.



    இந்த உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், ‘இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு, "நீலம் புரடொக்சன்ஸ்" முதல் படம் பண்ண போறோம், இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு.. அப்படின்னு சொன்னார். 
    இயக்குனர் மாரிசெல்வராஜிடம் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சிட்டு போய், யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு கேட்டேன். மேலும், முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால என்னால ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.

    இயக்குனர் மாரிசெல்வராஜிடம் பேசிய பிறகு இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன் அதனால் எளிதாக ஆர்வத்துடன் வேலைசெய்ய ஆரம்பித்தோம். அதனால விசுவலா படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது என்னால புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது.

    இயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும் போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது.

    இந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்" என்றார்.
    ×