search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selectors"

    • பல்வேறு இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • தேர்வு முடியும் வரை காத்திருந்து மனைவிகளை அழைத்து சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் அரசுப்பணிகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பதவிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்தத் தோ்வுக்காக ஏராளமானோா் விண்ணப்பித்தனர்.

    இவா்களுக்கான குரூப்- 4 தோ்வானது இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக திருப்பூா், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், உடுமலை, பல்லடம், திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, ஊத்துக்குளி ஆகிய இடங்களில் 166 மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் மொத்தம் 48 ஆயிரத்து 145 போ் தோ்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.

    தேர்வு இன்று காலை 9-30மணிக்கு தொடங்கி 12-30 மணி வரை நடைபெற்றது. தோ்வு முறைகேடுகளைக் கண்காணிக்க 166 கண்காணிப்பு அலுவலா்கள், 16 பறக்கும் படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அதேபோல ஆள் மாறாட்டம், தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தோ்வு அறைகளில் ஒளிப்பதிவு செய்ய 174 வீடியோ கிராபா்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தோ்வு மையங்களுக்கு திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேலும் தேர்வு மையங்களில் மின்சாரம், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் காலை 7மணி முதலே தேர்வாளர்கள் குவிந்தனர். அவர்கள் தேர்வுக்கான பாடங்களை தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து படித்தனர். மேலும் பஸ் நிலையங்களில் தேர்வாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்களுக்கு தேவையான உதவிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இளம்பெண்கள் பலர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தேர்வு மையத்திற்கு வந்தனர். தேர்வு முடியும் வரை காத்திருந்து மனைவிகளை அழைத்து சென்றனர். 

    ×