என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SEALING GUARRY"

    • புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரிக்கு கனிம வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்
    • இதுவரை அந்த குவாரியில் 50 முதல் 70 அடிக்கு பாறைகள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், திருமயம், நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில குவாரிகள் சட்ட விரோதமாக விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

    குறிப்பாக இந்த குவாரிகளால் விளைநிலங்கள் மற்றும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நார்த்தாமலை அருகில் உள்ள நெடும்பாறை பகுதியில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக குவாரி ஒன்று இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    மேலும் அந்த குவாரியில் இரவு, பகல் பாராமல் எந்தநேரமும் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பகலில் கூட வெளியிட நடமாட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

    இதையடுத்து நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் புகார் கூறப்பட்ட கல் குவாரிக்கு அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பாறைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டிந்த நபர்கள் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

    தொடர்ந்து பாறைகளை அகற்ற வைத்திருந்த ஹிட்டாச்சி எந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுவரை அந்த குவாரியில் 50 முதல் 70 அடிக்கு பாறைகள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

    கனிமவளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, குளத்தூர் தாசில்தார் சக்திவேல் ஆகியோர் குவாரியை பார்வையிட்டு தலைமறைவான நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த குவாரிக்கு அருகாமையில் தான் போலீசாரின் துப்பாக்கி சுடும் மையம் செயல்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து பாய்ந்து வந்த தோட்டா சிறுவன் உடலில் பாய்ந்து உயரிழந்தான். இதையடுத்து அந்த துப்பாக்கி சுடும் மையம் மூடப்பட்டது.

    தற்போது பல மாதங்களாக புகார் கொடுத்தும் மூடப்படாத சட்டவிரோத குவாரியை அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிலக துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதிக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தாதது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த பகுதியில் இயங்கும் குவாரிகள் முறையாக அனுமதி பெறப்பட்டதா, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதா என இனியாவது அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×