search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satguru arrives"

    • பிரதமர் நரேந்திர மோடி சத்குருவின் பயணத்தை பாராட்டி பேசி தனது மனமார்ந்த ஆதரவையும் தெரிவித்தார்.
    • 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், கிராம மக்களும் திரளாக வந்து சத்குருவை வரவேற்க உள்ளனர்.

    கோவை:

    மண் வளப் பாதுகாப்பிற்காக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார். இதுவரை சுமார் 27,200 கி.மீ பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

    மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இப்பயணத்தை தொடங்கிய சத்குரு, பல நாடுகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு விட்டு மே 29-ம் தேதி இந்தியாவிற்கு வந்தார்.

    உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரதம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சத்குருவின் பயணத்தை பாராட்டி பேசினார். மேலும், தனது மனமார்ந்த ஆதரவையும் தெரிவித்தார்.

    பின்னர் குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பயணித்த சத்குரு அம்மாநில முதல்வர்கள், அமைச்சர்களை சந்தித்து மண் வளப் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வலியுறுத்தினார்.

    நாளை மறுநாள் அவர் தமிழகத்திற்கு வருகிறார். சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பஸ் நிலையம் என சூலூர் வரை 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், கிராம மக்களும் திரளாக வந்து சத்குருவை வரவேற்க உள்ளனர்.

    அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடக்கும் 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் பங்கேற்கிறார். அந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதை தொடர்ந்து மாலையில் கொடிசியாவில் நடக்கும் உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்கிறார்.

    பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு 8.30 மணியளவில் ஆதியோகியை வந்து அடைய உள்ளார். வரும் வழியில் உள்ளூர் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பாரம்பரிய இசை கருவிகளுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர். ஆதியோகி முன்பு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ×