search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salethampatti lake is full"

    • தொடர் மழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது.
    • இதனால் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்வதற்காக வெட்டப்பட்ட கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்வதற்காக வெட்டப்பட்ட கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த உபரிநீர், மெய்யன் தெரு, பனங்காடு, சிவதாபுரம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சூழ்ந்தது. சிவதாபுரம் பிரதான சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீரை அவர்களே வெளியேற்றி வருகின்றனர்.

    ஒவ்வொரு முறையும் மழைக் காலங்களில் ஏரி நிரம்பும் போது, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே ஏரி நீர் குடியிருப்பு பகுதிக்கு வராதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில், சேலம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் அருண்குமார், பாலமுருகன், பூங்கொடி, கார்த்தி, வெங்கடாசலம், ராணி, வேலுச்சாமி, இருசாக்கவுண்டர், சுதாகர் என 30க்கும் மேற்பட்டோர், சேலம் - இளம்பிள்ளை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பா.ஜ.க.வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதில், போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து திடீரென சாலையில் தேங்கியிருந்த வெள்ள நீரில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கொண்டலாம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 16 பேரை குண்டு கட்டாக கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×