என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of sugarcane"

    • 762 ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிரிட்டு வந்தனர்.
    • 250 ஏக்கரில் பன்னீர் கரும்புகள் விற்பனையாகாமல் அந்தந்த நிலத்தில் இருந்து உள்ளன.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, பத்திரக்கோட்டை, சத்திரம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 762 ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிரிட்டு வந்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவசமாக பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு திடீரென்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இல்லை என அறிவித்ததால் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து தமிழக அரசு ஒரு ஜோடி கரும்பு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்து அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் குழு அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக சென்று பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள் குழு பன்னீர் கரும்பு வாங்குவதற்கு நேரடியாக சென்று அதனுடைய தரம் மற்றும் உயரம் போன்றவற்றை முழுவதும் ஆய்வு செய்து விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்தனர். இதில் பொங்கல் தொடங்குவதற்கு முன்பு சத்திரம், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாரிகள் சரியான முறையில் பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யாமல் வெட்டப்பட்ட கரும்புகள் அந்தந்த தோட்டத்தில் இருந்ததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து பன்னீர் கரும்பு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வாங்கினார்கள்.

    இந்த நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக சென்று பன்னீர் கரும்பு கொள்முதல் செய்ததை தொடர்ந்து தற்போது சுமார் 250 ஏக்கரில் பன்னீர் கரும்புகள் விற்பனையாகாமல் அந்தந்த நிலத்தில் இருந்து உள்ளன. இதனை தொடர்ந்து விவசாயத்தில் பன்னீர் கரும்பு சுமார் 250 ஏக்கருக்கு மேல் விற்பனையாகாமல் இருந்ததால் மிகுந்த கவலையுடன் இருந்து வருகின்றனர். மேலும் பன்னீர் கரும்பு பயிரிட்டு அதனை ஒரு வருடம் பாதுகாத்து அதற்கு செலவு செய்து தற்போது விற்பனை ஆகாததால் ஒருபுறம் கவலை ஏற்பட்டாலும் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது என விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.

    தற்போது விற்பனையாகாத கரும்புகளை மிக குறைந்த விலையில் நாளை நடைபெறும் ஆற்று திருவிழா, தைப்பூசம், மாசி மகம் உள்ளிட்ட அடுத்தடுத்து வரும் திருவிழா காலங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் வாகனங்கள் மூலம் ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக விற்பனை செய்வதால் பன்னீர் கரும்பு பயிர் செய்ததற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் அசல் தொகை கிடைத்தால் போதுமானது என்ற நிலைக்கு விவசாயிகள் மனநிலை வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது போன்ற காலங்களில் அரசு உரிய முறையில் விவசாயிகளுக்கு உதவி புரிய வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×