என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russian educational exhibition"

    ரஷிய நாட்டில் உள்ள மருத்துவ, என்ஜினீயரிங் பல்கலைக்கழகங்களின் கல்வி கண்காட்சி சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.
    சென்னை:

    தென்னிந்திய ரஷிய கூட்டமைப்பு தூதரகத்தின் கலாசார துணைத்தூதர் மிகைல் ஜே.கோர்பட்டோவ், தென்னிந்திய ரஷிய கூட்டமைப்பு தூதரகத்தின் துணைத்தூதர் யூரி எஸ்.பிலோவ், ‘ஸ்டடி அப்ராடு’ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஷிய நாட்டில் முன்னணியில் உள்ள மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை கற்பிக்கும் 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் ரஷிய கல்வி கண்காட்சி வருகிற 9-ந் தேதியும் (நாளை), 10-ந் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) என 2 நாட்கள் ரஷிய கலாசார மையத்தில் நடைபெற இருக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்புவோர் அதற்கு தகுதியான சான்றிதழ்களுடன் வந்தால் உடனடி மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.

    சென்னையை தொடர்ந்து வருகிற 11-ந் தேதி சேலத்திலும் (ஓட்டல் ஜி.ஆர்.டி. கிராண்ட் எஸ்டான்சியா), 12-ந் தேதி திருச்சியிலும் (ஓட்டல் ரம்யாஸ்), 13-ந் தேதி ஐதராபாத்திலும் (ஓட்டல் மேரி கோல்ட், அமீர்பேட்) கல்வி கண்காட்சி நடக்கிறது.

    ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி., ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற முன்தகுதி தேர்வுகள் எதையும் மாணவர்கள் எழுத தேவையில்லை. ஆனால் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படி மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் எங்களுக்கு மாணவர் சேர்க்கை குறையும். இருந்தாலும் இந்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது.

    மருத்துவ படிப்பினை ஆங்கில வழியில் படிக்க 6 ஆண்டுகளும், ரஷிய மொழியில் படிப்பதற்கு 7 ஆண்டுகளும் ஆகும். அதேபோல் ஆங்கில வழியில் என்ஜினீயரிங் படிப்பு படிக்க 4 ஆண்டுகளும், ரஷிய மொழியில் படிக்க 5 ஆண்டுகளும் ஆகும். கடந்த ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து 1,224 மாணவர்கள் ரஷியாவில் படிப்பதற்காக சென்றுள்ளனர். அதில் 95 சதவீதம் பேர் மருத்துவம் படிப்பை தேர்வு செய்தனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #tamilnews
    ×