search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rosogolla Day"

    ரசகுல்லா உரிமையை பெற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளதால், வருகிற 14-ந்தேதியை ‘ரசகுல்லா தினம்’ ஆக மேற்கு வங்க அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது. #RosogollaDay #WestBengal
    கொல்கத்தா:

    பெங்காலி சுவீட்ஸ் என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது “ரசகுல்லா”தான்.

    கிழக்கு இந்திய மக்களின் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்றாக உள்ள ரசகுல்லா தற்போது நாடு முழுவதும் பெரும்பாலானவர்களால் சுவைக்கப்படும் பிரதானமான இனிப்பு வகைகளில் ஒன்றாக திகழ்கிறது.

    பால், எலுமிச்சை சாறு, சர்க்கரை பாகு  ஆகிய கலவை மூலம் ரசகுல்லா தயாரிக்கப்படுகிறது. சர்க்கரைப் பாகில் பந்து வடிவில் ஊற வைத்துக் கொடுக்கப்படுவதால் ரசகுல்லா தனித்துவமான சுவையுடன் இருக்கிறது.

    ரச என்றால் “சாறு” என்று அர்த்தம். குல்லா என்றால் “பந்து” என்று அர்த்தம். இனிப்புச் சாறில் மிதக்கும் பந்து வடிவம் என்பதால் இந்த இனிப்பு வகைக்கு “ரசகுல்லா” என்ற பெயர் ஏற்பட்டது.

    ஆனால் இந்த ரசகுல்லா எங்கு தோன்றியது என்பதில் கடந்த ஆண்டு சர்ச்சை உருவானது. மேற்கு வங்கம், ஒடிசா இரு மாநிலங்களும் ரசகுல்லாவுக்கு உரிமை கோரி புவிசார் குறியீடு ஒதுக்கக் கோரின.



    ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற பூரி ஜெகன் நாதர் ஆலயத்தில் கடந்த சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இறைவனுக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி ஒடிசா அரசு ரசகுல்லாவுக்கு உரிமை கோரியது.

    ஆனால் கொல்கத்தாவில் பாக்பசாரில் 1866-ம் ஆண்டு முதல் நோபின் சந்திரதாஸ் என்பவர் குடும்பத்தினர் ரசகுல்லா தயாரித்து விற்று வருவதாக மேற்கு வங்காள அரசு ஆதாரத்தை காட்டியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 14-ந்தேதி ரசகுல்லா இனிப்புக்கு புவிசார் குறியீடு உரிமையை மேற்கு வங்க அரசு பெற்றது.

    ரசகுல்லா உரிமையை பெற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளதால், அந்த தினத்தை “ரசகுல்லா தினம்” ஆக கொண்டாட மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 14-ந்தேதியை ரசகுல்லா தினமாக கொல்கத்தாவில் கொண்டாட உள்ளனர்.

    14-ந்தேதியன்று கொல்கத்தா நியூடவுன் பகுதியில் இனிப்பு அரங்கம் உருவாக்கப்படும். அங்கு விதம், விதமான ரச குல்லாக்கள் காட்சிக்காக வைக்கப்படும். இனிப்பு தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து அரசு அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். #RosogollaDay #WestBengal
    ×