search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roadside restaurants"

    • நகரின் முக்கிய சாலையோரங்களில் அதிகப்படியான உணவகங்கள் திறக்கப்படுகின்றன.
    • பாதுகாப்பு விதிகளை சரிவர பின்பற்றாத உணவகங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    உடுமலை பகுதியில் உள்ள திருமூர்த்தி அணை, அமராவதி அணை, முதலைப்பண்ணை உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் பழநி, திருமூர்த்திமலை, மூணாறு, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்வோர், உடுமலை மார்க்கமாகவே சென்று திரும்புகின்றனர்.

    இதன் காரணமாக நகரின் முக்கிய சாலையோரங்களில் அதிகப்படியான உணவகங்கள் திறக்கப்படுகின்றன. ஆனால் இந்த உணவகங்களில் போதிய சுகாதாரமின்றி உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.இதனால் இவற்றில் உணவு உண்பவர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஓட்டல்களின் முகப்பு பகுதியிலேயே சமையலறை செயல்படுவதால் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, சாலையில் படிந்துள்ள மணல், தூசி போன்றவை காற்றின் வாயிலாக பரவி உணவுப்பொருட்களில் கலக்கிறது.

    அதேபோல் உணவு தயாரிக்கப்படும் இடம், சமையலறை ஆகியவை 200 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என விதிகள் உள்ளது. ஆனால் பல இடங்களில் விதிகளுக்கு மாறாக உணவு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் திடீரென உணவகங்கள் திறக்கப்படுகின்றன. வாகனங்களிலும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.எவ்வித உரிமம் மற்றும் பதிவின்றி செயல்படும் இந்த உணவகங்களில், உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும். இது ஒருபுறமிருக்க இத்தகைய கடைகளின் காரணமாக சாலையொட்டி கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், விபத்து அபாயமும் ஏற்படுகிறது.

    பாதுகாப்பு விதிகளை சரிவர பின்பற்றாத உணவகங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.இது சம்பந்தமாக உணவு பாதுகாப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் சோதனை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×