search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice mill Owners"

    • அனைத்து விதமான அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூடுதல் விலை நடுத்தரக் குடும்பத்தை மட்டும் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்லும் அடித்தட்டு மக்களையும் பெருமளவில் பாதிக்கக் கூடியது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியைச் சார்ந்த தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஜி.எஸ்டி. வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கு உள்ள சாத்தியக் கூறுகள் பற்றி விவாதித்தனர்.

    கடந்த ஜூன் 28, 29-ந் தேதிகளில் பஞ்சாப் மாநிலம், சண்டிகர் நகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை பதிவு செய்த பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி இருந்த சூழ்நிலையில், தற்போது பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால், ஒரு கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும். அதாவது, ரூ.1,000-க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட அரிசிப் பை, இனிமேல் ரூ.1,050 ஆக விலை உயரக் கூடும். இந்தக் கூடுதல் விலை நடுத்தரக் குடும்பத்தை மட்டும் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்லும் அடித்தட்டு மக்களையும் பெருமளவில் பாதிக்கக் கூடியது.

    எந்த அரசும் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு இதுவரை வரி அறிவிப்பு செய்ததில்லை. எனவே, மக்களைப் பாதிக்கும் இந்த 5 சதவீத வரியை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பினை பற்றியும், தமிழக நிதித்துறை அமைச்சரைச் சந்தித்து கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், திமுக. சுற்றுசூழல் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு தெரிவித்தனர்.

    இதையடுத்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைச் சந்தித்து சுமார் 30 நிமிடம் உரையாடி அரிசி மீதான ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கு உரியச் சாத்தியக்கூறுகள் பற்றியும் விவாதித்தார். வருகின்ற மத்திய அரசின் ஜிஎஸ்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் நிச்சயமாக மத்திய நிதியமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.

    ×